அஜித்குமாரின் வித்தியாசமான நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “மங்காத்தா”. இத்திரைப்படம் அஜித்குமாரின் 50 ஆவது திரைப்படமாகும். வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் அஜித்குமாரின் கெரியரில் மிக முக்கியமான வெற்றித் திரைப்படமாக அமைந்தது.
மேலும் இதில் அஜித்குமார் ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதில் அஜித்குமாருக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்த நிலையில் அர்ஜூன், அஞ்சலி, ஆண்ட்ரியா, வைபவ், அஷ்வின், மகத் போன்ற பல நடிகர்கள் நடித்திருந்தனர்.
இந்த நிலையில் பல ஆண்டுகளுக்கு முன்பு வெங்கட் பிரபு “மங்காத்தா” திரைப்படம் குறித்து ஒரு பேட்டியில் பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “அஜித்குமார் என்னிடம் எதாவது நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பமாக இருக்கிறது என்று கூறினார். அதற்கு நான், ‘5 பேர் கெட்டவங்க, அதில் ஒருத்தன் மட்டும் ரொம்ப ரொம்ப கெட்டவன்’ என்று ஒரு வரியில் மங்காத்தா படத்தின் கதையை குறித்து கூறினேன். உடனே அவர், ‘நான் நிச்சயம் நடிக்கிறேன்’ என்று கூறிவிட்டார்.
எனினும் சிலர் என்னை குழப்பிவிட்டார்கள். கதையில் இவ்வளவு நெகட்டிவிட்டி இருக்கிறதே எங்கேயாவது தவறாக போய்விடுமோ என்று என்று பலரும் கூறி என்னை பயமுறுத்திவிட்டார்கள். ஆதலால் கொஞ்சம் வேறு மாதிரியான கதைகளை எழுதத்தொடங்கினேன். ஆனால் அஜித்குமார் ‘நீ முதலில் சொன்ன கதைதான் எனக்கு பிடித்திருக்கிறது. அதையே படமாக பண்ணலாம்’ என்று எனக்கு நம்பிக்கையூட்டும்படி கூறினார். அவ்வாறுதான் இந்த படம் உருவானது” என்று கூறியிருக்கிறார்.
ரசிகர்கள் பலரும் “மங்காத்தா பார்ட் 2” திரைப்படத்திற்காக மிகவும் ஆவலோடு காத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால் அது குறித்த எந்த தகவலும் இதுவரை வெளிவரவில்லை என்பதுதான் ரசிகர்களின் சோகம்.