ஆந்திர மாநிலம் திருப்பதி அருகிலுள்ள ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் அதிகாலை 5 மணி முதலே அதிர வைக்கும் ஒரு சம்பவம் அரங்கேறி வருகிறது. அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், அங்குள்ள நடைமேம்பாலத்தின் பிளாட்பார்ம் ஃபூட்ஓவர் பிரிட்ஜில் ஆபத்தான முறையில் தொங்கியபடியும், ரயில் மேல் நின்றும் தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டல் விடுத்துக் கூச்சலிட்டார்.
இளைஞர் தொங்கிக்கொண்டிருந்த பகுதிக்கு அருகே உயர் மின்னழுத்த மின்சார கம்பிகள் சென்றதால், அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் இருக்க ரயில்வே அதிகாரிகள் உடனடியாக அப்பகுதிக்கான மின்சார விநியோகத்தை துண்டித்தனர். இதன் காரணமாக திருப்பதியிலிருந்து ரேணிகுண்டா சந்திப்பு வழியாகச் சென்னை, ஹைதராபாத் மற்றும் விஜயவாடா செல்லும் அனைத்து முக்கிய ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறை வீரர்கள் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினர், தண்டவாளத்தின் மேல் மீட்ப வலைகளை அமைத்து கீழே குதித்ததும் அந்த இளைஞரைப் பத்திரமாக மீட்டனர். இச்சம்பவத்தால் ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் பல மணி நேரமாக ரயில்கள் ஸ்தம்பித்து பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
