சென்னை போரூர் பகுதியில் இன்ஸ்டாகிராம் வாயிலாகப் பெண்ணொருவரை ஆபாசமாக மிரட்டி, நிர்வாணப் படங்களைக் கேட்டுத் தொந்தரவு செய்த வாலிபரை சைபர் கிரைம் போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கணவரைப் பிரிந்து தனியாக வசித்து வரும் 35 வயது மதிக்கத்தக்கப் பெண்ணின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு, மர்ம நபர் ஒருவர் ஆபாசமான குறுஞ்செய்திகளையும் வீடியோக்களையும் அனுப்பியுள்ளார். மேலும், அந்தப் பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து அனுப்பிய அந்த நபர், பெண்ணின் நிர்வாணப் படங்களை அனுப்பவில்லை என்றால் அவற்றைச் சமூக வலைதளங்களிலும் அவர் வேலை செய்யும் இடத்திலும் பரப்பி விடுவதாக மிரட்டியுள்ளார்.
இச்சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட பெண் சென்னை மேற்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்ட ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினர், சம்பந்தப்பட்ட இன்ஸ்டாகிராம் கணக்கின் விவரங்களைச் சேகரித்தனர். தொழில்நுட்ப ஆதாரங்களின் உதவியுடன், இந்த மிரட்டல் செயலில் ஈடுபட்டவர் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெரின் D சேகர் (23) என்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து போலீஸார் அவரை கைது செய்து, அவரிடமிருந்த செல்போனையும் பறிமுதல் செய்தனர்.
போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. கைது செய்யப்பட்ட பெரின், பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் விவகாரம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்குத் தெரிந்தால், அவர் அதனை மற்ற உறவினர்களிடம் கூறிவிடுவார் என்ற பயத்தில், அவரை முன்கூட்டியே மிரட்டிப் பணிய வைக்க பெரின் இந்த ஆபாச மிரட்டல் யுக்தியைக் கையாண்டது தெரியவந்தது. தற்போது பெரின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
