பெங்களூரிலிருந்து சென்னைக்கு தனியார் சொகுசு பேருந்தில் பயணம் செய்த சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் திவ்யாவிற்கு ஏற்பட்ட பாலியல் அச்சுறுத்தல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே நள்ளிரவில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, அதே பேருந்தில் பயணித்த கர்நாடகாவைச் சேர்ந்த 38 வயது நாகராஜ் என்பவர், மதுபோதையில் திவ்யாவிடம் அநாகரீகமான முறையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் அபயக்குரல் எழுப்பவே, சக பயணிகள் உடனடியாகச் செயல்பட்டு நாகராஜைப் பிடித்து தர்ம அடி கொடுத்துக் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
பாதிக்கப்பட்ட இளம்பெண் அளித்த புகாரின் பேரில் நாட்றம்பள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் நாகராஜ் செய்த குற்றம் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பொதுப் போக்குவரத்தில், அதுவும் இரவு நேரப் பயணங்களில் பெண்களுக்கு எதிரான இதுபோன்ற அத்துமீறல்கள் தொடர்வது பயணிகளிடையே மிகுந்த அச்சத்தையும் பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கூடுதல் கண்காணிப்பு அவசியம் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.
