வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் திமுக கூட்டணியில் தீவிரமடைந்துள்ளன. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு மிகக் குறைந்த எண்ணிக்கையிலான தொகுதிகளே ஒதுக்கப்படுவதாகக் கூறி அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் மிகுந்த வேதனையுடன் காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார். தலித் மக்களின் பெரும் ஆதரவைப் பெற்ற விசிகவிற்கு வெறும் ஐந்தாறு இடங்களை மட்டும் தந்து ஆளுங்கட்சி அடக்குமுறையைச் செலுத்துவதாகவும், இது அவர்களின் பண்ணையார்தனத்தைக் காட்டுவதாகவும் தவெக-வைச் சேர்ந்த ஆதவ் அர்ஜுனா கடுமையாக விமர்சித்துள்ளார்.
கூட்டணிக் கட்சிகளைத் தேர்தல் வரை பயன்படுத்திக் கொண்டு பிறகு ஏமாற்றுவது அவர்களின் வாடிக்கை என்றும், கடந்த காலத்தில் வைகோவை ஓரங்கட்டியது போலத் தேர்தல் முடிந்ததும் விசிகவையும் அவர்கள் ஒழித்துக்கட்டத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். கருணாநிதி காலத்தில் 10 தொகுதிகள் வழங்கப்பட்ட நிலையில், தற்போது அவர்களை வளரவிடாமல் தடுப்பதாகக் சாடிய அவர், தவெக தலைவர் எதற்கும் அஞ்சாமல் அமைதியாக இருப்பதே அவரது தைரியத்தைக் காட்டுகிறது என்றும் தெரிவித்தார்.
