“ஈரான் பிடிச்சா அங்கயே போயிருங்க…” ஷியா முஸ்லிம்களை விரட்டும் பாகிஸ்தான்…? ராணுவ தளபதியின் பகீர் பேச்சு…!!

By Devi Ramu on பங்குனி 22, 2026

Spread the love

பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீர் சமீபத்தில் பங்கேற்ற இஃப்தார் விருந்து நிகழ்ச்சியில், ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் போர் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது ஷியா பிரிவு மதத் தலைவர்களிடம் பேசிய அவர், ஈரானின் மீது அதிக பற்று கொண்டவர்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேறி அங்கேயே சென்றுவிடலாம் எனத் தெரிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் பெரும்பான்மையாக உள்ள சன்னி பிரிவினருக்கும், சிறுபான்மையினரான ஷியா பிரிவினருக்கும் இடையே ஏற்கனவே கருத்து வேறுபாடுகள் நிலவி வரும் சூழலில், ராணுவ தளபதியின் இந்தத் தனிப்பட்ட விமர்சனம் உள்நாட்டுப் பிளவை அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் கருதப்படுகிறது.

பாகிஸ்தான் உருவாவதில் ஷியா மக்களின் பங்களிப்பு முக்கியமானது எனச் சுட்டிக்காட்டியுள்ள அந்தப் பிரிவின் தலைவர்கள், ராணுவ தளபதியின் பேச்சு தங்களின் தேசபக்தியைச் சந்தேகிப்பதாகக் கூறி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வெளிநாடுகளுக்கு விசுவாசம் காட்டி நாட்டில் குழப்பத்தை விளைவிக்க யாரையும் அனுமதிக்க மாட்டோம் என அசீம் முனீர் எச்சரித்திருப்பது, சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் செயலாகப் பார்க்கப்படுகிறது. உலகளவில் ஷியா இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நாடாக ஈரான் திகழும் நிலையில், அண்டை நாடான பாகிஸ்தானில் எழுந்துள்ள இந்த விவகாரம் சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது.