தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள ஹசுராபாத் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் திரிவேணி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ள நிலையில் வெங்கடேஷ் தன்னுடைய மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். அவரின் துன்புறுத்தல்களை தாங்க முடியாமல் திரிவேணி அண்மையில் தன்னுடைய பெற்றோர் வீட்டுக்கு கிளம்பிச் சென்று விட்டார். அதன் பிறகு வெங்கடேஷ் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி இனி சண்டை போட மாட்டேன் என்று கூறி மனைவியை மீண்டும் தன் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.
ஆனால் வீட்டுக்கு வந்து சில நாட்களில் மீண்டும் மனைவியுடன் வெங்கடேஷ் சண்டை போட தொடங்கியுள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வெங்கடேஷ் தன்னுடைய மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்து அவரை கடுமையாக தாக்கியுள்ளார். அதன் பிறகு மனைவியின் உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொளுத்தினார். குழந்தைகள் முன்னிலையிலேயே அவர்களின் தாயை வெங்கடேஷ் உயிருடன் எரித்துள்ளார். இதனை தடுக்க முயன்ற அவருடைய மகளையும் தீயில் தள்ளிவிட்டார்.
இதனால் அந்தப் பெண் குழந்தையும் உடலில் மோசமான தீக்காயங்களுடன் அலறி துடித்தது. உடனே அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் திரிவேணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். அவருடைய மகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவரும் நிலையில் தலைமறைவாக இருந்த வெங்கடேஷை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
