கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே காட்டுக்கு கூடலூர் குளத்தங்கரை தெருவை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவருடைய மனைவி தமிழரசி (35). இந்த தம்பதியினருக்கு ஹரிகிருஷ்ணன் (13), ஹரி சக்தி (10) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த பத்து வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் கோபாலகிருஷ்ணன் சென்னைக்குச் சென்று அங்கு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு சென்னையில் வசித்து வந்துள்ளார். தமிழரசி தன்னுடைய குழந்தைகளுடன் கணவர் தம்பிகளான பாலகிருஷ்ணன் மற்றும் முருகானந்தம் ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில் பாலகிருஷ்ணன் மற்றும் முருகானந்தம் ஆகியோர் பாலியல் துன்புறுத்தல் செய்வதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழரசி போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரைத் தொடர்ந்து இரண்டு பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமுறைவாக இருந்த பாலகிருஷ்ணன் முன் ஜாமீன் பெற்று ஒரு வாரத்திற்கு முன்பு வெளியே வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட முருகானந்தமும் விடுதலையாகியுள்ளார். இருவரும் காவல் நிலையத்திற்கு செல்ல காரணமாக இருந்த அண்ணி மீது கோபத்தில் இருந்து உள்ளனர்.
இந்நிலையில் பாலகிருஷ்ணன் நேற்று மாலை போதையில் வீட்டுக்குச் சென்று தமிழரசி இடம் தகராறு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் தகராறு முற்றியதால் ஆத்திரத்தில் பாலகிருஷ்ணன் அறிவாலை எடுத்து தமிழரசி கழுத்தை அறுத்து தலையை துண்டித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். முருகானந்தம் மட்டும் வீட்டிலேயே இருந்துள்ளார். உடனே இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தமிழரசி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதேசமயம் வீட்டில் இருந்த முருகானந்தத்தை கைது செய்துள்ள போலீசார் தப்பியோடிய பாலகிருஷ்ணனை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
