மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகர் நகரின் பஜ்ரங் சௌக் பகுதியில், பட்டப்பகலில் நடுரோட்டில் வைத்து 35 வயது இளைஞர் அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
தேவேஷ் என்கிற பண்டி சந்தரேஷ் தீட்சித் (35) என்பவர் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த போது, பவன் திலீப் பராஷர் (22) என்பவர் தான் ஓட்டி வந்த காரால் ஸ்கூட்டர் மீது பலமாக மோதியுள்ளார். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த தேவேஷை, பவன் இரும்புக் கம்பியால் தலை மற்றும் முகத்தில் சரமாரியாகத் தாக்கியதில் தேவேஷ் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
பார் ஒன்றிற்குப் பாதுகாப்பு அளிக்கும் தொழிலில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட போட்டி மற்றும் ‘சின்ன பையன் ‘ என்று தேவேஷ் கிண்டல் செய்ததால் ஆத்திரமடைந்து இக்கொடூரத்தைச் செய்ததாகப் பவன் சிட்கோ காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இச்சம்பவம் குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
