தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஸ்ரீ மூலக்கரை மேலூரைச் சேர்ந்தவர் ரமேஷ். ரேடியோ செட் வாடகைக்கு விடும் தொழில் செய்து வரும் இவர், தாய்-தந்தை இல்லாததால் தனியாக வசித்து வருகிறார். தன்னைப் போலவே பெற்றோரை இழந்த ஒருவரைத் திருமணம் செய்ய விரும்பி, தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் அருகே உள்ள செவல்குளத்தைச் சேர்ந்த பானுமதி என்பவரை கடந்த 2025 மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டார். இவர்களின் வாழ்க்கை சில காலம் மகிழ்ச்சியாகச் சென்ற நிலையில், மனைவியின் நடவடிக்கைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் ரமேஷுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தின.
திருமணம் முடிந்து ஒரு மாதத்திற்குப் பிறகு, பானுமதி செல்போனில் வேறு ஆண்களுடன் ரகசியமாகப் பேசி வருவதை ரமேஷ் கவனித்தார். கணவருடன் ஏற்பட்ட தகராறினைத் தொடர்ந்து தன் அண்ணன் வீட்டிற்குச் சென்ற பானுமதி, அங்கிருந்து திருப்பூர் சென்று இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான ராஜேஷ் என்பவரை ஏமாற்றித் திருமணம் செய்துகொண்டார். இதன்பிறகு இதே பாணியில் செல்வம், சூர்யா மற்றும் தஞ்சாவூரைச் சேர்ந்த பிரபாகர் உள்ளிட்ட பல இளைஞர்களைத் தனக்குத் திருமணமாகவில்லை என்று கூறி ஏமாற்றி, அவர்களுடன் வாழ்ந்து பணம் பறிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.
மனைசியைக் கண்டுபிடிக்க முயன்ற ரமேஷ் நீடாமங்கலம் மற்றும் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையங்களில் புகார் அளித்தும் அவர் திருந்தவில்லை. மாறாக, கணவர் மீதே ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பொய் புகார் அளித்த பானுமதி, கவுன்சிலிங் முடிந்து வரும் வழியிலேயே ரமேஷைக் கழட்டிவிட்டு விவாகரத்து நோட்டீஸும் அனுப்பினார். இதற்கிடையில், பானுமதியின் அண்ணன் முத்து, அவரது மனைவி செல்வி மற்றும் சகோதரி பார்வதி ஆகியோர் கூட்டாகச் சேர்ந்து, இந்த மோசடித் திருமணங்களை மறைத்து கோவில்பட்டியைச் சேர்ந்த முத்து கோமதிநாயகம் என்பவருக்கு கடந்த 2026 செப்டம்பர் 3 அன்று பானுமதிக்கு மீண்டும் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
ஒரே ஆண்டில் ஆறு பேரைத் திருமணம் செய்து ஏமாற்றிப் பணம் பறித்த தனது மனைவியின் தொடர் மோசடியை அறிந்த ரமேஷ் கடும் அதிர்ச்சியடைந்தார். ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால், மனம் தளராத ரமேஷ், இதற்கான அனைத்து ஆதாரங்களையும் திரட்டிக் கொண்டு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேரில் புகார் அளித்தார். மேலும், இந்தத் தொடர் கல்யாண மோசடியில் ஈடுபட்டுள்ள பானுமதியையும், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது குடும்பத்தினரையும் உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
திரைப்படங்களில் வரும் காட்சிகளை மிஞ்சும் வகையில் ஒரே ஆண்டில் ஆறு ஆண்களை ஏமாற்றித் திருமணம் செய்து கொண்ட இந்தச் சம்பவம் தூத்துக்குடி மற்றும் சுற்றியுள்ள வட்டாரங்களில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அப்பாவி இளைஞர்களின் வாழ்க்கையைக் குறிவைத்துத் தொடர் மோசடியில் ஈடுபட்டுவரும் ‘கல்யாண ராணி’ பானுமதி மற்றும் அவரது கூட்டாளிகள் மீது காவல்துறையினர் விரைந்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
