இப்போதெல்லாம் நாட்டின் எந்த மூலையில் பார்த்தாலும் தினந்தோறும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. குறிப்பாக 15 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவது ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அப்படி ஒரு சம்பவம் தான் உத்திர பிரதேசம் மாநிலத்தில் நடந்துள்ளது. உத்திரபிரதேசம் மாநிலம் பாலியா மாவட்டம் உபாவ் என்ற கிராமத்தை சேர்ந்த சப்லூ ராஜ்பார் என்ற 25 வயது வாலிபர் அதே கிராமத்தை சேர்ந்த 12 வயது சிறுமியை நேற்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
சிறுமியை தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்ற அவர் அங்கு வைத்து அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது. தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி தனது அம்மாவிடம் அழுது கொண்டே கூறிய நிலையில் இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தாய் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் மீது போலிசில் புகார் அளித்தார். இந்த புகாரை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த வாலிபரை தேடி வந்த நிலையில் அருகே இருந்த கிராமத்தில் வைத்து அவரை இன்று அதிகாலை கைது செய்தனர்.
அங்கு பதுங்கி இருந்த அவர் போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய நிலையில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் அவருடைய காலில் குண்டு பாய்ந்து சுருண்டு விழுந்தார். இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் அவரிடமிருந்து நாட்டுத் துப்பாக்கியையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
