ராஜா சாருக்கும் எங்க அப்பாவுக்கும் இடையிலான நட்பு வழக்கமானது இல்லை… மலேசியா வாசுதேவனின் மகள் பகிர்ந்த தகவல்!

By vinoth on சித்திரை 15, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் பல சூப்பர்ஹிட் பாடல்களைப் பாடி ரசிகர்களின் செவிகளில் தேன்மழை பொழிந்தவர் மலேசியா வாசுதேவன். குறிப்பாக இசைஞானி இளையராஜா இசையில் அவர் பாடிய 80 கள் மற்றும் 90 கள் பாடல்கள் இன்றும் ரசிக்கத்தக்கவையாக உள்ளன.

மலேசியாவைப் பூர்வீகமாகக் கொண்ட அவர், நடிக்கவேண்டும் என்ற ஆசையில் தமிழ்நாடு வந்து வாய்ப்புகளை தேடியுள்ளார். பொருளாதார பிரச்சனை காரணமாக தன்னுடைய பாஸ்போர்ட்டையே விற்றுவிட்டு திரும்ப மலேசியா செல்ல முடியாமலும் தவித்துள்ளார்.

   

அப்போதுதான் அவருக்கு எஸ்பிபியின் இசைக்குழுவில் பாடகராகும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. அவர்களோடு இணைந்து இந்தியா முழுவதும் பல இடங்களில் நூற்றுக்கணக்கான கச்சேரிகளில் பாடியுள்ளார். அதன் மூலமாகதான் இளையராஜா, கங்கை அமரன் மற்றும் பாஸ்கர் ஆகியோரோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்படிதான் அவருக்கு பதினாறு வயதினிலே படத்தில் எஸ் பி பி பாடவேண்டிய ஒரு பாடல் அவரால் பாடமுடியாத சூழலில் இவருக்குக் கிடைத்து முன்னணி பாடகர் ஆனார்.

   

அதன் பின்னர் ஜேசுதாஸ், பாலசுப்ரமணியத்துக்கு அடுத்து தமிழ் சினிமாவில் அதிக பாடல்களை பாடிய பாடகர் என்ற பெருமையைப் பெற்றார். அந்தளவுக்கு இவருக்கு சாகாவரம் பெற்ற பாடல்களைக் கொடுத்தார் இளையராஜா. அப்படி புகழின் உச்சிக்கு சென்ற மலேசியா வாசுதேவன், உடல்நலக் குறைவு காரணமாக 2000 களின் தொடக்கத்தில் பாடமுடியாத சூழலுக்கு ஆளானார்.

 

நீண்டகாலம் உடல்நலம் சரியில்லாமல் இருந்த அவர் 2011 ஆம் ஆண்டு உயிரிழந்தார். இந்நிலையில் அவருக்கும் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும் இடையில் இருந்த நட்பு குறித்துப் பேசியுள்ளார் மலேசியா வாசுதேவனின் மகள் பிரசாந்தினி. அதில் “எங்க அப்பாவுக்கு ராஜா சார் மேல் மரியாதை கலந்த நட்பு இருந்தது. அவர் இல்லையென்றால் நான் நல்ல நிலைமைக்கு வந்திருக்க முடியாது என்று சொல்லிக் கொண்டே இருப்பார். அவர்கள் அடிக்கடி சந்தித்துக் கொள்வதெல்லாம் இல்லை. அவர்கள் நட்பே வித்தியாசமானது. அவர்கள் தங்கள் மனசுக்குள்ளாகவே பேசிக்கொள்வார்கள் போல.” எனக் கூறியுள்ளார்.