அருணாசலப் பிரதேச மாநிலத்தின் இட்டாநகரைச் சேர்ந்த “கார்கா டிங்கிள் கோங்கோ” என்ற சிறுமியை சிலர் “சீனக்காரர்” என்று தவறாகக் குறிப்பிட்டதற்கு, அச்சிறுமி “என்னைச் சீனக்காரர் என்று கூப்பிடாதீர்கள், நான் இந்தியர்” என்று தைரியமாகப் பதிலளித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அச்சிறுமியின் தேசப்பற்றைப் பாராட்டி ஊக்கமளிப்பதற்காகத் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வாழ்த்துச் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அச்சிறுமியைப் பாராட்டிப் பதிவிட்ட மஹுவா மொய்த்ரா, “என் செல்லக் குழந்தையே, நீதான் இந்தியா… ஜெய் ஹிந்த். ஜெய் மணிப்பூர்” என்று குறிப்பிட்டு வாழ்த்தியிருந்தார். அருணாசலப் பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமிக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் போது, அம்மாநிலத்தின் பெயரைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக “மணிப்பூர்” என்று குறிப்பிட்டது பெரும் புவியியல் குளறுபடியாக மாறியது.
https://twitter.com/MahuaMoitra/status/2090516590437810346/video/1
மஹுவா மொய்த்ராவின் இந்தத் தவறைக் கவனித்த நெட்டிசன்கள், சமூக வலைதளங்களில் அவரை நகைச்சுவையாகவும் காரசாரமாகவும் விமர்சிக்கத் தொடங்கினர். “அப்படியென்றால் இட்டாநகர் மணிப்பூரில் தான் இருக்கிறதா, இது எனக்குப் புதிய பொது அறிவு ” என்றும், “இன்றைய புவியியல் பாடத்தில் இட்டாநகர் மணிப்பூரில் உள்ளது என்பதைக் கற்றுக் கொண்டோம்” என்றும் பதிவிட்டு நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
