தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு நடந்து கொண்டிருக்கும் நிலையில் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக வாக்குறுதியில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தது. அதன்படி தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் செயல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் தகுதி உள்ள பெண்கள் அனைவருக்கும் ஒவ்வொரு மாதமும் வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. அதேசமயம் தகுதியான விடுபட்ட பெண்களுக்கும் உரிமை தொகை வழங்கப்படும் என கடந்த சட்ட சபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி விண்ணப்பம் செய்வதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகின்றது.
இப்படியான நிலையில் வருகின்ற ஜூலை 15 முதல் சிறப்பு முகாம்கள் மூலமாக விடுபட்ட பெண்கள் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்திருந்தது. தேர்தல் நெருங்கும் நிலையில் மகளிர் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் வாங்க வேண்டும் என திமுக நினைத்து நாசுக்காக காய் நகர்த்தி வருகிறது. தற்போது விடுபட்ட பெண்கள் அனைவருக்கும் செப்டம்பர் மாதத்திற்குள் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
