தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு நடந்து கொண்டிருக்கும் நிலையில் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக வாக்குறுதியில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தது. அதன்படி தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் செயல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் தகுதி உள்ள பெண்கள் அனைவருக்கும் ஒவ்வொரு மாதமும் வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. அதேசமயம் தகுதியான விடுபட்ட பெண்களுக்கும் உரிமை தொகை வழங்கப்படும் என கடந்த சட்ட சபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் கடந்த ஜூலை 15ஆம் தேதி முதல் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம் மூலமாக விடுபட்ட பெண்கள் அனைவரும் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு தொடர்ந்து விண்ணப்பித்து வருகிறார்கள். இந்த முகாமில் விண்ணப்பித்தவர்களுக்கு மகளிர் உரிமை தொகை எப்போது கிடைக்கும் என்பது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. இந்நிலையில் வீட்டில் ஓய்வூதியதாரர் இருந்தால் மகளிர் உரிமைத்தொகை கிடைக்காது என பலரும் நினைக்கின்றனர். அண்மையில் திருத்தப்பட்ட விதிகளின்படி ஓய்வூதியம் பெறுபவர் தான் உரிமை தொகை பெற முடியாது. ஆனால் அந்த வீட்டில் 21 வயது நிரம்பிய பெண் இருந்தால் அவர் ஆயிரம் ரூபாய் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். அதனால் நவம்பர் மாதம் வரை நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் தகுதியானவர்கள் விண்ணப்பிக்குமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
