மதுரை உத்தங்குடியில் அமைந்துள்ள உயர்நீதிமன்ற கிளை அருகே, பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் நகரத்தார் டிரஸ்ட்டுக்கு சொந்தமான இரண்டரை ஏக்கர் நிலம் கடந்த 2004-ஆம் ஆண்டு நெடுஞ்சாலைத்துறையால் கையகப்படுத்தப்பட்டது. நிலத்தை இழந்த டிரஸ்ட்டிற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று அப்போது உத்தரவிடப்பட்டிருந்தும், நீண்ட காலமாக அதற்கான தொகை வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வந்தது. இதனால் பாதிக்கப்பட்ட தரப்பினர் தங்களுக்கு நியாயம் கேட்டு மதுரை மாவட்ட 5-வது கூடுதல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சியர், தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கான நிலம் கையகப்படுத்தும் வட்டாட்சியர் (தாசில்தார்) மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் திட்ட இயக்குனர் ஆகியோர் எதிர்மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்டனர். தொடர்ந்து நீதிமன்றம் உத்தரவிட்டும் இழப்பீடு வழங்கப்படாததால், 2023-ஆம் ஆண்டு நிலவரப்படி நிலுவைத்தொகை ரூ.2.42 கோடியாக இருந்தது. அதன்பின்பும் அதிகாரிகள் தரப்பில் எவ்வித தொகையும் செலுத்தப்படாததால், தற்போது வட்டியுடன் சேர்த்து இந்த இழப்பீட்டுத் தொகை சுமார் ரூ.3.50 கோடியைக் கடந்துள்ளது.
நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் இழுத்தடித்த அரசு அதிகாரிகளுக்குப் பாடம் புகட்டும் வகையில், மதுரை மாவட்ட 5-வது கூடுதல் நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதன்படி, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள 13 கார்கள் (ஆட்சியரின் கார், 8 ஜீப்புகள், 4 அம்பாசிடர் கார்கள் உட்பட), 100 கணினிகள், 20 மடிக்கணினிகள் (லேப்டாப்), 50 பிரிண்டர்கள், 20 ஏசி எந்திரங்கள், 200 மின்விசிறிகள் மற்றும் 400 பீரோக்கள், 300 நாற்காலிகள் உள்ளிட்ட அசையும் பொருட்களை ஜப்தி செய்ய நீதிமன்றம் ஆணையிட்டது. இந்த அதிரடி உத்தரவைத் தொடர்ந்து, மனுதாரர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் திரண்டு சென்று ஆட்சியர் அலுவலக வாகனங்களில் ஜப்தி நோட்டீஸை ஒட்டினர்.
இந்தத் திடீர் ஜப்தி நடவடிக்கை மதுரை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் உடனடியாக மனுதாரர்களை அழைத்து அவசரப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். நீதிமன்ற உத்தரவுப்படி அனைத்துப் பொருட்களும் ஜப்தி செய்யப்பட்டால் மாவட்ட நிர்வாகமே முற்றிலும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஊழியர்களும் அதிகாரிகளும் பணி செய்ய முடியாத நிலை உருவாகும் என்பதால், இந்தச் சமரசப் பேச்சுவார்த்தையின் முடிவில் இழப்பீட்டுத் தொகை முழுமையாக வழங்கப்படுமா அல்லது கால அவகாசம் கோரப்படுமா என்பது குறித்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
