CINEMA
மூகாம்பிகை கோயிலில் சிறப்பு அனுமதி பெற்று தியானம் செய்த எம் ஜி ஆர்… அழைத்துச் சென்ற இயக்குனரின் மெய்சிலிர்த்து சொன்ன வார்த்தைகள்!
தமிழ் சினிமாவில் 50 களில் இருந்து 77 வரை தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக முடிசூடா மன்னனாக விளங்கியவர் எம் ஜி ஆர். நடிப்பு மட்டும் இல்லாமல் இயக்கம், பாடல்கள் என பலதுறைகளில் வித்தகராக இருந்தவர் எம் ஜி ஆர். அதனால்தான் அரசியலுக்கு வந்தபோதும் அனைவரையும் தன் கட்டுப்பாட்டில் வைத்து தொடர்ந்து மூன்று தேர்தல்களில் வெற்றி பெற்று முதல்வராக இருந்தார்.
ஆனால் எம் ஜி ஆருக்கு இந்த வெற்றிகள் அவ்வளவு எளிதாகக் கிடைக்கவில்லை. அவர் சினிமாவில் 1930 களிலேயே அறிமுகமாகிவிட்டாலும் 50 களின் தொடக்கத்தில்தான் அவரால் ஒரு கதாநாயகனாக் நிலைபெற முடிந்தது. அதுவரை துண்டு துக்கடா வேடத்தில்தான் நடித்து வந்தார்.
எம் ஜி ஆர் ஹீரோவானதும் , அதன் பிறகு பெரும்புகழ் பெற்றதும் உலகறிந்த வரலாறு. அவரின் வளர்ச்சிக்கு அவர் திமுகவில் இருந்ததும் ஒரு காரணம். அதுபோல அவரின் திரையுலக வெற்றி திமுகவுக்கும் பயன்பட்டது. கடவுள் பக்தராக இருந்தாலும் திமுகவில் இருந்ததால் எம் ஜி ஆர் வெளிப்படையாக கோயில்களுக்கு செல்ல மாட்டார். ஆனால் அவர் வீட்டில் அவர் பூஜை செய்வதுண்டு.
ஆனால் ஒரு படத்துக்காக எம் ஜி ஆர் கர்நாடகாவுக்கு சென்ற போது அங்குள்ளம் மூகாம்பிகை கோயிலுக்கு இயக்குனர் கே சங்கர் அவரை அழைத்துச் சென்றுள்ளார். அதுமட்டுமில்லாமல் அங்கே உள்ள ஞானப்பீட இடத்தில் தியானம் செய்ய சிறப்பு அனுமதியும் வாங்கித் தந்துள்ளார். அங்கு கிட்டத்தட்ட ஒருமணி நேரம் எம் ஜி ஆர் தியானம் செய்தாராம்.
தியானம் முடித்துவிட்டு வெளியே வந்த போது “இந்த ஒருமணிநேரம் என் வாழ்க்கையில் நான் என்றுமே அனுபவித்திடாத அமைதியாக இருந்தது. அதை என்றுமே நான் மறக்க மாட்டேன்” என மெய்சிலிர்த்து சொன்னாராம். இதை இயக்குனர் கே சங்கர் பதிவு செய்துள்ளார்.