ஒரே ஒரு ரூபாய் மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டு எம் ஜி ஆர் நடித்த திரைப்படம்.. நெகிழ்ந்து போன இயக்குனர்!

By vinoth

Updated on:

தமிழ் சினிமாவில் தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக முடிசூடா மன்னனாக விளங்கியவர் எம் ஜி ஆர். நடிப்பு மட்டும் இல்லாமல் இயக்கம், பாடல்கள் என பலதுறைகளில் வித்தகராக இருந்தவர் எம் ஜி ஆர். அதனால் படங்களில் அவர் வைத்ததுதான் சட்டம். அவர் படத்தில் யார் யார் நடிக்க வேண்டும், யார் பாடல் எழுத வேண்டும், பாடலுக்கான மெட்டு எப்படி இருக்க வேண்டும் என்பதையெல்லாம் அவர்தான் முடிவு செய்வார்.

அதே போல சம்பள விஷயத்தில் ஒருசிலரிடம் மிகவும் கறாராக நடந்துகொண்டாலும், பெரும்பாலானவர்களிடம் எம் ஜி ஆர் மிகவும் பெருந்தன்மையாகவே நடந்து கொண்டுள்ளார். அப்படி ஒரு சம்பவம்தான் இயக்குனர் பி ஆர் பந்தலுவுக்கு ஆயிரத்தில் ஒருவன் ஷூட்டிங்கின் போது நடந்துள்ளது.

   

பி.ஆர். பந்தலு ஆயிரத்தில் ஒருவன் கதையை முதலில் வேறொரு நடிகரை வைத்து இயக்கதான் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் வீனஸ் பிக்சர்ஸ் கிருஷ்ணமூர்த்தியும், பி.ஆர்.பந்தலுவும் சந்தித்த போது ஆயிரத்தில் ஒருவன் படத்தினைப் பற்றிக் கூறியிருக்கிறார் பந்தலு. அப்போது அவர்தான் இந்த படம் எம் ஜி ஆருக்கு பொருத்தமாக இருக்கும் எனக் கூறியுள்ளார். அதன் பின்னர் பி ஆர் பந்தலு எம் ஜி ஆரை சந்தித்து கதையைக் கூறியுள்ளார்.

கதையைக் கேட்டு வியந்த எம் ஜி ஆர் உடனடியாக அந்த படத்தில் நடிக்க சம்மதித்துவிட்டாராம். இதையடுத்து எம் ஜி ஆருக்கு எவ்வளவு சம்பளம் என்று கேட்டுள்ளார் பந்தலு. எம் ஜி ஆர் ஒரு ரூபாய் கொடுங்கள் என்றுள்ளார். அவர் உடனே ஒரு லட்சம் ரூபாயை கொடுத்துள்ளார். அதை வாங்க மறுத்த எம் ஜி அர், ஒரே ஒரு ரூபாய் மட்டும் வாங்கிக் கொண்டு அந்த படத்தை நடித்துக் கொடுத்தாராம்.

இப்படி ஒரு மனிதரா என வியந்த பந்தலு படத்தின் ஷூட்டிங் முடிந்து படம் ரிலீஸாகி வெற்றி பெற்றவுடன் அன்றைய மார்க்கெட் நிலவரப்படி எம் ஜி ஆர் எவ்வளவு சம்பளம் வாங்கினாரோ அதை தேடி சென்று கொடுத்து வந்துள்ளார்.