கோவையில் வெள்ளலூர் கறிக்கடை பேருந்து நிறுத்தம் அருகில் கடந்த 30ஆம் தேதியன்று உறவினர்களுடன் பேசிக் கொண்டிருந்த சரஸ்வதி என்ற மூதாட்டியிடம், முகமூடி அணிந்த நபர் ஒருவர் கிணிக் எங்கு திறப்பார்கள் மற்றும் மருத்துவரின் வீடு எங்குள்ளது என வழிகேட்டுள்ளார். மூதாட்டி திசையைக் காட்டியபோது, திடீரென அவரது கழுத்தில் இருந்த சுமார் 4 பவுன் தங்கச் செயினைப் பறித்துக் கொண்டு அந்த நபர் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து போத்தனூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
போலீசார் அமைத்த 3 தனிப்படைகள் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து நகை பறிப்பிற்குப் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணைக் கண்டறிந்தனர். குற்றவாளிகள் அடையாளத்தை மறைக்க முகமூடியும், வாகன எண்ணை மறைக்க கருப்பு நிற டேப்பும் பயன்படுத்தியிருந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, கே.ஜி. சாவடி அருகே உள்ள கல்லூரியில் பயிலும் மாணவனையும், குற்றத்திற்கு உதவிய அவரது காதலியையும் காவல் துறையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், ஆடம்பர வாழ்க்கை மற்றும் மாணவனுக்கு இருந்த கடனை அடைப்பதற்காக வயதான பெண்களை குறிவைத்து கைவரிசை காட்டியது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 2 செல்போன்கள் மற்றும் குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இவர்களுக்கு வேறு குற்றச் சம்பவங்களிலும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
