“அன்புதானே எல்லாம்!”… ராமதாஸுக்கே அட்வைஸ் செய்த திலகபாமா… யார் இந்த பெரம்பூர் பாமக வேட்பாளர் திலகபாமா?

By Muthu Mani on பங்குனி 30, 2026

Spread the love

பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலப் பொருளாளரான திலகபாமா, ஒரு கவிஞராகவும் எழுத்தாளராகவும் அறியப்பட்டு, தற்போது அக்கட்சியின் மிக முக்கியமான பெண் முகமாக உருவெடுத்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியைச் சேர்ந்த இவர், மதுரையில் வணிகவியல் பயின்றவர். 2016 மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தல்களில் சிவகாசி தொகுதியிலும், 2024 மக்களவைத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியிலும் போட்டியிட்டு ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுத் தனது அரசியல் பலத்தை நிரூபித்தார். கட்சியின் கொள்கைகளை ஊடக விவாதங்களில் ஆணித்தரமாக முன்வைக்கும் திறமை படைத்த இவர், தென் மாவட்டங்களில் பாமகவை வலுப்படுத்துவதிலும் பெண்களை ஒருங்கிணைப்பதிலும் முக்கியப் பங்காற்றி வருகிறார்.

தற்போது 2026 சட்டமன்றத் தேர்தலில் சென்னை பெரம்பூர் தொகுதி பாமக வேட்பாளராகத் திலகபாமா அறிவிக்கப்பட்டுள்ளார். இத்தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் திமுகவின் சிட்டிங் எம்.எல்.ஏ ஆர்.டி. சேகர் ஆகிய இரு பெரும் சக்திகளை அவர் எதிர்கொள்கிறார். ஒருபுறம் திரைத்துறையிலிருந்து அரசியலுக்கு வந்துள்ள விஜய்யின் செல்வாக்கு, மறுபுறம் இருமுறை எம்.எல்.ஏ-வாக இருந்த ஆர்.டி. சேகரின் அனுபவம் எனப் பெரம்பூர் தொகுதி தற்போது மாநிலத்தின் மிக முக்கியமான ‘நட்சத்திரத் தொகுதியாக’ மாறியுள்ளது. இந்த மும்முனைப் போட்டியில் திலகபாமா அளிக்கும் சவால் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

   

அரசியல் ரீதியாகத் துணிச்சலான முடிவுகளை எடுக்கும் திலகபாமா, பாமக உட்கட்சி விவகாரங்களிலும் தனது குரலை ஓங்கி ஒலிப்பவர். குறிப்பாக, ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே மோதல் ஏற்பட்டு அன்புமணி தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டபோது, “பாமகவின் ஜனநாயகம் கொலை செய்யப்பட்டுள்ளது; அய்யாவின் இந்த முடிவு தவறு” என பகிரங்கமாகத் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். “அன்புதானே எல்லாம்” எனக் கூறி அன்புமணிக்காக ஆதரவு திரட்டிய இவர், தற்போது கூட்டணி பலத்துடன் பெரம்பூரில் வெற்றி வாகை சூடுவாரா என்பதை அறிய ஒட்டுமொத்த தமிழகமும் ஆவலுடன் காத்திருக்கிறது.