ஸ்டாலின் vs விஜய்… சென்னையை ஆக்கிரமிக்கும் ‘லெட்டர் பேட்’ கட்சிகள்.. வேட்பாளர்கள் பட்டியலில் ‘ஈ’யாய் மொய்க்கும் டம்மி வேட்பாளர்கள்.. அதிரும் தேர்தல் அரசியல்…!!!

By Muthu Mani on சித்திரை 20, 2026

Spread the love

தமிழகச் சட்டசபைத் தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக போன்ற பிரதான கட்சிகளையும் தாண்டி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஒரு முக்கிய மாற்றுச் சக்தியாக உருவெடுத்துள்ளது. இளைஞர்கள் மட்டுமின்றி, வாக்குரிமை பெறாத சிறுவர்கள் மத்தியிலும் விஜய்க்கு ஏற்பட்டுள்ள பரவலான வரவேற்பு தவெகவை ஒரு தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாகக் காட்டுகிறது. இருப்பினும், இந்த நட்சத்திரப் போட்டிக்கு இடையே, சென்னை மண்டலத்தில் உள்ள பெரம்பூர் மற்றும் கொளத்தூர் ஆகிய இரண்டு தொகுதிகள் ‘லெட்டர் பேட்’ கட்சிகள் மற்றும் உதிரிக் கட்சிகளின் ஆதிக்கத்தால் நிரம்பி வழிகின்றன.

குறிப்பாக, முதல்வர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் ரிபப்ளிக்கன் பார்டி ஆஃப் இண்டியா, பகுஜன் சமாஜ், தமிழக வாழ்வுரிமை கட்சி எனப் பல கட்சிகள் ஈ மொய்ப்பது போல வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளன. வாய்க்குள் நுழையாத பெயர்களைக் கொண்ட கட்சிகளும், வீரத் தியாகி விசுவநாத தாஸ் தொழிலாளர்கள் கட்சி போன்ற உதிரி அமைப்புகளும் இங்கு வரிசைகட்டி நிற்கின்றன. இதில் சில கட்சிகள் மக்கள் சேவைக்காகப் போட்டியிட்டாலும், பல கட்சிகள் திரைமறைவில் ‘பேர அரசியலில்’ ஈடுபடுவதற்காகவே வேட்பாளர்களை நிறுத்தியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

   

இதே நிலைதான் விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியிலும் நீடிக்கிறது. அங்கு தமிழ் தெலுங்கு தேசிய கட்சி, மக்கள் முரசு கட்சி, தக்கம் கட்சி எனப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. பெரிய கட்சிகளுக்குப் பினாமியாக வேலை செய்யவும், உள்ளூரில் ஒரு அரசியல் செல்வாக்கை ஏற்படுத்திக் கொள்ளவும் இத்தகைய உதிரி கட்சிகளும் சுயேச்சைகளும் போட்டியிடுகின்றனர். சுனாமி போல வீசும் பிரதான கட்சிகளின் பிரச்சாரத்திற்கு முன்னால், இவர்களின் இருப்பு கடுகை விடச் சிறுத்துக் காணப்படுவதோடு, இவர்களில் பலரைத் தேர்தல் களத்திலேயே பார்க்க முடிவதில்லை என்பதே யதார்த்தம்.

   

வேதனையான விஷயம் என்னவென்றால், இதில் போட்டியிடும் பல வேட்பாளர்கள் தங்களது டெபாசிட் தொகையைக்கூட மீட்க முடியாத நிலையில் உள்ளனர். டெபாசிட் தொகையைக் கட்டுவதற்கே வழியில்லாத பலரை இக்கட்சிகள் ‘பரிதாப வேட்பாளர்களாக’ நிறுத்தியுள்ளன. அதிகாரப் போட்டி மற்றும் லெட்டர் பேட் அந்தஸ்தைப் பெறுவதற்காக நடத்தப்படும் இந்த உதிரி கட்சிகளின் அரசியல், உண்மையான ஜனநாயகப் போட்டியில் ஒருவித குழப்பத்தையே ஏற்படுத்துகின்றன. இறுதியில், இவர்களில் பெரும்பாலானோர் டெபாசிட் இழந்து களத்திலிருந்து காணாமல் போகும் நிலையே தொடர்கிறது.