தருமபுரியில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்றுப் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், திமுக கூட்டணியில் இருந்து விசிக விலகியதற்கான காரணங்கள் மற்றும் தவெக அரசுடன் இணைந்தது குறித்த பல்வேறு கேள்விகளுக்கு விரிவான விளக்கம் அளித்துள்ளார். விசிகவின் மீது முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், தங்களது அரசியல் பயணத்தின் பின்னணியையும், தேர்தல் அரசியலில் நுழைந்ததன் நோக்கத்தையும் தெளிவாக எடுத்துரைத்தார்.
தான் பதவி மற்றும் பவுசுக்காகவே கூட்டணி மாறியதாக எழுந்த குற்றச்சாட்டுகளை மறுத்த திருமாவளவன், “பதவி தான் முக்கியம் என்றால், நான் பல ஆண்டுகள் தேர்தல் அரசியலை முன்னெடுக்காமல் இருந்திருக்க மாட்டேன்” என்று சுட்டிக்காட்டினார். கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்த காலத்தில், பாமக கொடுத்த அழுத்தத்தால் விசிக தொண்டர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்ததாகவும், அதன்பின்னரே தேர்தல் அரசியலில் இறங்கி மக்களுக்கு வழிகாட்ட வேண்டிய சூழல் உருவானதாகவும் அவர் நினைவு கூர்ந்தார். மேலும், தலித் அல்லாத ஒரு திரை பிரபலமாக இருந்திருந்தால் தங்களை அன்றே தூக்கிக் கொண்டாடியிருப்பார்கள் என்றும் ஆதங்கத்தைப் பதிவு செய்தார்.
2024 தேர்தலின் போதே திமுக கூட்டணியை விட்டு வெளியேறப் பல அழுத்தங்களும், ஆசை வார்த்தைகளும் வந்ததாகவும், ஆனால் தாம் கூட்டணியைக் கட்டிக்காப்பதில் உறுதியாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். தவெக தலைவர் விஜய் அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்பே இந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததாகக் குறிப்பிட்ட அவர், காங்கிரஸ் கட்சிக்கும் திமுகவுக்கும் இடையே நிலவிய உளவியல் மோதல்களையும், தொகுதி பங்கீட்டின் போது கூட்டணித் தலைமை காட்டிய அணுகுமுறையையும் விமர்சித்தார். “கூட்டணி தோற்றாலும் ஒன்றாக இருப்போம்” என்ற நம்பிக்கையைத் தராமல், கூட்டணி கட்சிகளைத் தக்கவைக்க திமுக தவறிவிட்டதே தற்போதைய சூழலுக்குக் காரணம் என்றார்.
கூட்டணியை விட்டு வெளியேறிய பிறகும் விஜய்யின் அழைப்பை ஏற்று உடனடியாக அமைச்சரவையில் சேரத் தாம் ஒப்புக்கொள்ளவில்லை என்றும், கம்யூனிஸ்ட்கள் உள்ளிட்ட மற்ற தோழமைச் கட்சிகள் எடுத்த முடிவுகளுக்குப் பிறகே இந்த நிலைப்பாடு எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். கொள்கைப் பிடிப்போடு பயணிக்கும் அதே வேளையில், தம்மோடு 30 ஆண்டுகளாக விசுவாசமாக உழைத்த தம்பி வன்னியரசு போன்ற எளிய தொண்டர்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே, 19 நாட்களுக்குப் பிறகு இந்த முடிவை எடுத்ததாக மனம்திறந்து பேசினார்.
கட்சியின் வளர்ச்சி குறித்துப் பேசுகையில், “விசிக கூடாரம் காலி” என்றும், “தொண்டர்கள் விஜய் பின்னால் சென்றுவிட்டார்கள்” என்றும் பரப்பப்படும் வதந்திகளை அவர் முற்றிலுமாக நிராகரித்தார். இப்போதைய விசிக இளைஞர்கள் மற்றும் ‘ஜென்-ஜி’ (Gen-Z) தலைமுறையினரின் பெரும் ஆதரவைப் பெற்ற கட்சியாகத் திகழ்கிறது என்று பெருமிதத்துடன் குறிப்பிட்ட அவர், ஆடுகளைப் பத்திரமாகப் பூட்டி வைக்கத் தவறிவிட்டு கதவைத் திறந்து வைத்த திமுகவின் அணுகுமுறையே கூட்டணி முறிவுக்கு முழு முதல் காரணம் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
