நேரடியாக யார் பெயரையும் கூறவில்லையே…! “ஒரே வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா…? உதயநிதி கைதை விளாசி தள்ளிய கிருஷ்ணசாமி…!!

By Devi Ramu on ஆவணி 4, 2026

Spread the love

காவிரி விவகாரம் தொடர்பாகத் தஞ்சாவூரில் நடைபெற்ற திமுக கூட்டத்தில், ஆபாசமாகப் பேசியதாகக் கூறி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்குப் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேடையில் பேசிய உரையில் உதயநிதி நேரடியாக எந்தவொரு நபரின் பெயரையும் குறிப்பிடாத நிலையில், அவரது வார்த்தைகளுக்கு மறைமுகப் பொருள் கற்பித்துக் கைது நடவடிக்கை எடுப்பது முற்றிலும் தவறானது என்றும், இது எதிர்காலத்தில் அரசியல் அரங்கில் மிகவும் மோசமான முன்னுதாரணமாக மாறிவிடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பேச்சால் யாருக்கேனும் மனக்காயம் ஏற்பட்டிருந்தால் அவர்களிடம் மன்னிப்போ அல்லது வருத்தமோ கேட்க வைத்திருக்கலாம் அல்லது மான நஷ்ட வழக்குத் தொடர்ந்திருக்கலாம் என்று கூறிய அவர், அதை விடுத்து ஒரே வார்த்தைக்காக 9 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்வது ஏற்புடையதல்ல என்றார். மேலும், நாளைய தினம் சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ள சூழலில், எதிர்க்கட்சித் தலைவரைச் சிறையிலடைக்க முயல்வது ஜனநாயக மாண்புகளைச் சீர்குலைக்கும் செயல் எனக் குறிப்பிட்ட கிருஷ்ணசாமி, உதயநிதியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.