19 வயது புதுப்பெண்… அடுத்த சில நிமிடங்களில் 45 வயது பெண்…. புளிய மரத்தில் தொங்கிய உடல்…. கிருஷ்ணகிரியை உலுக்கிய மர்மம்….!

By Nanthini on புரட்டாதி 26, 2026

Spread the love

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள அலேகிருஷ்ணபுரம் கிராமத்தில் ஒரே நேரத்தில் 19 வயது இளம்பெண் உட்பட இரு பெண்கள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அலேகிருஷ்ணபுரம் கிராமத்தைச் சேர்ந்த 19 வயதான கீர்த்தனா என்பவருக்கு, கடந்த ஓராண்டுக்கு முன்பு அவரது தாய்மாமன் கந்தராஜ் என்பவருடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது. திருமணமாகி கணவருடன் வாழ்ந்து வந்த கீர்த்தனா, கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.

இந்நிலையில், செப்டம்பர் 25 அன்று குடும்பத்தினர் அனைவரும் வெளியே சென்றிருந்த நேரத்தில், கீர்த்தனா வீட்டின் உள்ளே தனியாக இருந்துள்ளார். மாலையில் பணி முடிந்து பெற்றோர் வீட்டிற்கு திரும்பியபோது, கீர்த்தனா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர். இதுகுறித்து உடனடியாக வேப்பனப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கீர்த்தனாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணையைத் தொடங்கினர்.

   

இந்த சோகத்தின் வடு மாறுவதற்குள், அதே கிராமத்தைச் சேர்ந்த 45 வயதான முனியம்மாள் என்ற பெண்ணும் கிராமத்தின் அருகே உள்ள புளிய மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த இந்த இரு சம்பவங்களால் அதிர்ச்சியடைந்த போலீசார், முனியம்மாளின் உடலையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

   

கீர்த்தனாவுக்கு திருமணமாகி ஓராண்டே நிறைவடைந்துள்ளதால், அவரது தற்கொலை குறித்து வருவாய் கோட்டாட்சியர் (RDO) தீவிர விசாரணை நடத்தி வருகிறார். மேலும், முனியம்மாளின் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்தும், இந்த இரு தற்கொலைகளுக்கும் இடையே ஏதேனும் தொடர்புகள் உள்ளதா என்ற கோணத்திலும் வேப்பனப்பள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே கிராமத்தில் இரு பெண்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோக அலையை ஏற்படுத்தியுள்ளது.