தமிழக அரசால் சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ் முதியோர், கைம்பெண்கள் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு மாதம் ரூ.1,200-உம், மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.1,500-உம் நிதியுதவியாக வழங்கப்பட்டு வருகிறது. ஏழை, எளிய மற்றும் நலிவடைந்த மக்களின் வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக விளங்கும் இந்த மாதாந்திர உதவித்தொகையானது பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின்படி வரும் செப்டம்பர் 2026 முதல் ஆதார் அடிப்படையிலான பணப்பரிவர்த்தனை முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இனிவரும் மாதங்களில் பயனாளிகளின் ஆதார் எண்ணுடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்குகளுக்கு மட்டுமே நிதியுதவித்தொகை நேரடியாக அனுப்பப்படும் என்று சென்னை மாவட்ட நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ் பயன்பெறும் அனைத்துப் பயனாளிகளும் தங்களது உதவித்தொகை எவ்வித தடையுமின்றி தொடர்ச்சியாகக் கிடைப்பதை உறுதிசெய்ய, உடனடியாக தங்களது வங்கிக் கிளைகளை அணுகி வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஆதார் இணைப்பு இல்லாத பட்சத்தில் மாதாந்திர உதவித்தொகை தற்காலிகமாகத் தடைபட வாய்ப்புள்ளது.
இது தொடர்பான சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளவும் தேவையான உதவிகளைப் பெறவும், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் சிறப்புத் துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகம் அல்லது அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தனி வட்டாட்சியர் மையங்களை அணுகலாம். பயனாளிகளுக்கு உரிய நேரத்தில் அரசு நிதி போய்ச்சேருவதை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகமும் மாநில அரசும் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக சென்னை மாவட்ட ஆட்சியர் எஸ்.மாலதி ஹெலன் தெரிவித்துள்ளார்.
