கவுகாத்தி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 22 வயதான நிமிஷா தாகுரியா என்ற மாணவி, அசாமின் அசாரா பகுதியில் உள்ள ஒரு ஹோம்ஸ்டேயில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவருடன் தங்கியிருந்த ஆசிஃப் அலி என்ற நபர், நிமிஷா மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, ஆசிஃப் அலியைப் பிடித்துக் காவலில் வைத்துள்ள காவல்துறையினர், அவரது கூற்றை உடனடியாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் வழக்கு குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
சமூகவியல் படித்து வந்த நிமிஷா, தாராபூர் பகுதியில் வசித்து வந்தார். கடந்த செப்டம்பர் 20 முதல் அவர் இந்த ஹோம்ஸ்டேயில் தங்கியிருந்ததாகக் கூறப்படும் நிலையில், சனிக்கிழமை அதிகாலை அவர் சுயநினைவின்றி மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர். இந்த ஹோம்ஸ்டேக்கு நிமிஷாவும் ஆசிஃபும் அடிக்கடி வந்து சென்றுள்ளதாக அங்குள்ள ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
நிமிஷாவுடன் காதலில் இருந்ததாகக் கூறப்படும் ஆசிஃப் அலியின் வாக்குமூலத்தை மட்டும் நம்பாமல், மரணத்திற்கான உண்மையான காரணத்தைக் கண்டறியக் காவல்துறையினர் அனைத்துக் கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடப்பதற்கு முன் என்ன நடந்தது, நிமிஷாவின் நகர்வுகள் மற்றும் இந்த வழக்கில் ஆசிஃப் அலியின் பின்னணி குறித்து தீவிரமாக ஆராயப்பட்டு வருகிறது.
