“ரொம்ப அருவருப்பா இருக்கு… பெண்கள் என்ன பகடைக்காயா?”…. சொந்தக் கட்சித் தலைவருக்கே குஷ்பு கொடுத்த மரண அடி…. கதறும் அரசியல் களம்…!

By Nanthini on ஆவணி 16, 2026

Spread the love

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது தாயார் குறித்து தெரிவித்த கருத்துக்கு அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பலத்த கண்டனங்கள் குவிந்து வருவதால் புதிய சர்ச்சை வெடித்துள்ளது. ‘ஒரே நாடு 2.0’ பத்திரிகை வெளியீட்டு விழாவில் பேசிய நயினார் நாகேந்திரன், சட்டப்பேரவையில் நடக்கும் நிகழ்வுகளை விமர்சிப்பதாகக் கூறித் தெரிவித்த கருத்துகள், நாகரீக எல்லையைத் தாண்டியுள்ளதாக பல்வேறு அரசியல் தலைவர்களும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் சொந்தக் கட்சியிலேயே எதிர்ப்பு கிளம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. பாஜக மாநிலத் துணைத் தலைவரும் நடிகையுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தில் நயினார் நாகேந்திரனின் பேச்சைக் கடுமையாகக் கண்டித்துள்ளார். “பிரதமர் நரேந்திர மோடி எப்போதும் ‘நாரி சக்தி’ (பெண் சக்தி) குறித்தும் பெண்களுக்கு அளிக்கப்பட வேண்டிய மரியாதை குறித்தும் வலியுறுத்தி வரும் வேளையில், ஒரு தாயை அவமதிக்கும் வகையில் அமைந்த இந்தக் கருத்து அருவருப்பானது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அரசியல் விமர்சனங்களுக்குப் பெண்களைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்” என்று அவர் தனது வேதனையைப் பதிவு செய்துள்ளார்.

   

மேலும், இந்த அநாகரிகமான பேச்சுக்கு தமிழக அமைச்சர் ராஜ்மோகன் மற்றும் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலரும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். தமிழகத்தின் அரசியல் களத்தைத் தரம் தாழ்த்தும் வகையில் அமையும் இதுபோன்ற பேச்சுகள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் என அண்ணாமலை தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார். அரசியல் லாபத்திற்காகத் தனிநபர் மற்றும் குடும்ப உறுப்பினர்களை இலக்கு வைத்துப் பேசுவது ஜனநாயகப் பண்புகளுக்கு மாறானது என்ற கருத்து வலுத்து வருகிறது.

   

சர்ச்சை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். “மேடையில் நான் பேசிய பேச்சைச் சிலர் திரித்துச் சித்தரித்து அரசியல் ஆதாயம் தேட முயல்கின்றனர். நான் எந்தவிதமான உள்நோக்கத்துடனும் யாரையும் குறிப்பிட்டுப் பேசவில்லை. தாய், தாய்நாடு மற்றும் தாய்மொழி மீது மிகுந்த அக்கறையும் மரியாதையும் கொண்டவன் நான்” என்று கூறித் தனக்கு எதிரான விமர்சனங்களுக்கு அவர் பதிலளித்துள்ளார்.