தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணிகள் மற்றும் கட்சித் தாவல்கள் வேகம் எடுத்துள்ள நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் பாமக-விற்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 2026 தேர்தலை எதிர்கொள்ள அனைத்துக் கட்சிகளும் மாற்றுக்கட்சியினரை ஈர்க்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், ஆரணி தொகுதி பாமக வன்னியர் சங்கச் செயலாளர் ‘பூக்கடை’ ராஜாமணி, அக்கட்சியிலிருந்து விலகித் தன்னை திமுக-வில் இணைத்துக் கொண்டார்.
திருவண்ணாமலையில் நடைபெற்ற நிகழ்வில், தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு முன்னிலையில் அவர் திமுக-வில் இணைந்தார். அவருடன் முன்னாள் நகரத் தலைவர் வி.எஸ். வெங்கடேசன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் திமுக-வில் இணைந்தனர். தேர்தல் நெருங்கும் வேளையில், ஆரணி பகுதியில் பாமக மற்றும் அதன் சார்பு அமைப்புகளிலிருந்து நிர்வாகிகள் வெளியேறுவது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
