தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க எந்த கட்சி யாருடன் கூட்டணி அமைக்க போகிறது என்பதை மிகுந்த எதிர்பார்ப்பாகவே உள்ளது. குறிப்பாக திமுக தனது கூட்டணியை பலமாக வைத்திருந்தாலும் மேலும் பல கட்சிகளை தங்கள் கூட்டணியில் இணைக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது. மறுபக்கம் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் விஜய் உள்ளிட்ட கட்சிகளை தங்கள் கூட்டணியில் இணைக்கும் முயற்சி நடந்து கொண்டிருக்கிறது. தனது கட்சியில் நிர்வாகிகள் பலரை நீக்கினாலும் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியில் ஈபிஎஸ் தீவிரம் காட்டி வருகின்றார்.
இந்நிலையில் அமமுகவின் முக்கிய நிர்வாகிகள் இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அமமுக அமைப்புச் செயலாளர் தேவதாஸ், பேராவூரணி தெற்கு ஒன்றிய செயலாளர் சிங்காரம், சேதுபாவாசத்திரம் வடக்கு ஒன்றிய அவைத்தலைவர் கருப்பையன் ஆகியோர் மீண்டும் இணைந்தது டெல்டாவில் அதிமுகவை பலப்படுத்தும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். ஏற்கனவே ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் உடன் பயணித்த பலரும் திமுக மற்றும் அதிமுகவில் இணைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
