பகல்ஹாம் தாக்குதல் சமயத்தில் பாகிஸ்தானின் புலனாய்வு அமைப்புகளுக்கு உளவாளியாக செயல்பட்ட குற்றச்சாட்டில் பிரபல யூடியூபரான ஜோதி மல்கோத்ரா கைது செய்யப்பட்டு இருக்கிறார். தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் கடந்த காலத்தில் கேரளா சுற்றுலா துறையின் விளம்பர நிகழ்வுக்கு இவர் அழைத்தது தொடர்பாக ஆளும் கட்சிக்கும், எதிர்கட்சிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானோடு தொடர்புள்ள ஒருவருக்கு கேரளாவில் ஏன் சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டது? அவருடைய வருகை நோக்கம் என்ன? இங்கு யாரை அவர் சந்தித்தார்? என்று ஆளும் பினராயி விஜயன் அரசிடம் பாஜக தலைவர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இந்த நிலையில் கேரள சுற்றுலாத் துறை அமைச்சர் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். ஜோதி மல்கோத்ராவை தேர்ந்தெடுப்பதில் அரசாங்கத்திற்கு நேரடி தொடர்பு இல்லை. சுற்றுலா பிரச்சாரத்திற்காக பணியமர்த்தப்பட்ட ஒரு நிறுவனம் நாடு முழுவதிலும் இருந்து பல பிரபலங்களை அழைத்ததாகவும் ஜோதி மல்கோத்ரா அவர்களின் ஒருவர் என்றும் கூறியுள்ளார். உளவு குற்றச்சாட்டுக்கள் வெளிச்சத்திற்கு வருவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே இந்த விளம்பரம் நிகழ்வு நடந்ததாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
