தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகரான முத்துராமனின் மகனான கார்த்திக் பாரதிராஜா இயக்கிய அலைகள் ஓய்வதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அந்த படம் மிகப்பெரிய ஹிட்டாக அதன் பின்னர் தொடர்ந்து பல படங்களில் நடித்தார் கார்த்திக். அவருக்கு திருப்புமுனையாக வருஷம் 16, மௌன ராகம், அக்னி நட்சத்திரம் , உள்ளத்தை அள்ளித்தா உள்ளிட்ட ஏராளமான ஹிட் படங்களைக் கொடுத்தார்.
அழகான தோற்றம் கொண்ட கார்த்திக் 80 களில் தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக வலம் வந்தார். சினிமாவில் மட்டுமில்லாமல் கார்த்திக் நிஜ வாழக்கையிலும் ஒரு ப்ளே பாயாகவே வலம் வந்துள்ளார். பல நடிகைகளோடு அவருக்கு தற்காலிக காதல்கள் இருந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது அது சம்மந்தமாக கிசுகிசுக்கள் பத்திரிக்கைகளில் வெளியாகி பரபரப்பிக் கிளப்பின. அதன் பின்னர் தன்னோடு நடித்த ராகினி மற்றும் அவர் தங்கை ஆகிய இருவரையுமே அவர் திருமணம் செய்துகொண்டார்.
கார்த்திக்கின் திறமைக்கு அவர் இப்போதும் முன்னணி நடிகராக இருந்திருக்க வேண்டும். ஆனால் அவரின் சில பழக்க வழக்கங்கள்தான் அவரை சினிமாவில் இருந்து வெளியேற்றின. கார்த்திக் சில விஷயங்களில் மிகவும் பிடிவாதமானவர். அதற்கு உதாரணமாக இந்த சம்பவத்தை சொல்லலாம்.
80 களில் கார்த்திக் பிரபல நடிகராக இருந்த போது கலைஞர் திரைக்கதை எழுதிய நியாயத் தராசு என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஹீரோயினாக நடிகை ராதாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். அந்த படத்தின் தொடக்க விழாவின் போது மேடையில் பேசிய நடிகர் கார்த்திக் தமிழில் பேசாமல் ஆங்கிலத்தில் பேசினார். இது கலைஞருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடைசியாக மேடையில் பேசிய கலைஞர், ‘ராதா மலையாள பொண்ணு அது வந்து தமிழ்ல பேசுது, ரகுவரன் வேறு மொழி பேசுபவராக இருந்தும் அவரும் தமிழில் பேசினார். ஆனால் என்னுடைய தம்பி முத்துராமன் சுத்த தமிழன் அவனுடைய மகன் கார்த்திக் இங்கிலீஷில் பேசுகிறார்” என்று செல்லமாக கடிந்து கொண்டாராம்.
இது கார்த்திக்குக் கோபத்தை ஏற்படுத்த அடுத்த நாளே தயாரிப்பாளரை அழைத்து இந்த படத்தில் நான் நடிக்க மாட்டேன் என பிடிவாதமாக மறுத்துவிட்டாராம். அதன் பின்னர் கார்த்திக் நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் நிழல்கள் ரவி நடித்து அந்த படம் 1989 ஆம் ஆண்டு வெளியானது குறிப்பிடத்தக்கது.