கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம், மடிகேரி அருகே உள்ள குந்தச்சேரி கிராமத்தில் நடந்துள்ள இரட்டை கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சந்து (64), குன்ஹாராம் (47), யசோதா (45) ஆகிய மூவரும் உடன் பிறந்த அண்ணன், தம்பி மற்றும் தங்கையாவர். இவர்களில் திருமணமாகாத யசோதாவும், மனைவியைப் பிரிந்து வாழ்ந்த குன்ஹாராமும் கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவியைப் போல ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இவர்களது முறையற்ற உறவைக் கண்டு சந்து கடும் ஆத்திரமடைந்தார்.
குடும்ப கௌரவத்தைக் காரணம் காட்டி, இந்த உறவைக் கைவிடுமாறு சந்து தனது தம்பி மற்றும் தங்கையை பலமுறை எச்சரித்துள்ளார். ஆனால், அவர்கள் அவரது பேச்சைக் கேட்காமல் தொடர்ந்து ஒன்றாக வாழ்ந்து வந்ததால், அவர்களுக்கிடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில்தான், சம்பவத்தன்று இரவு மூவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது மீண்டும் இந்த விவகாரம் குறித்து கடுமையான வாக்குவாதம் எழுந்துள்ளது.
மதுபோதையில் வாக்குவாதம் முற்றவே, ஆத்திரமடைந்த சந்து தனது வீட்டிலிருந்து கூர்மையான வாளை எடுத்து வந்து தம்பி குன்ஹாராம் மற்றும் தங்கை யசோதாவை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தனர். கொலையைச் செய்த கையோடு சந்து அங்கிருந்து தப்பியோடி தலைமறைவானார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பாகமண்டலா போலீசார் உடல்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
போலீசாரின் தீவிர விசாரணையில், சந்து இக்கொலையைச் செய்ததற்கு அதிர்ச்சிகரமான மற்றொரு காரணம் தெரியவந்தது. யசோதா மீது சந்துவுக்கும் ஒரு கண் இருந்ததாகவும், ஆனால் அவர் தனது தம்பியுடன் நெருக்கமாக இருந்ததை பொறுத்துக்கொள்ள முடியாமல், பொறாமையாலும் ஆத்திரத்தாலும் இக்கொலையைச் செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தலைமறைவாக இருந்த சந்துவை கைது செய்துள்ள போலீசார், இது தொடர்பாக தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
