பாஜகவுடன் கூட்டணி வைப்பது குறுகிய கால அதிகாரத்தை வழங்கினாலும், அது அரசியல் எதிர்காலத்தையே முடித்துவிடும் என்று மாநிலங்களவை எம்.பி. கபில் சிபல் எச்சரித்துள்ளார். அஜீத் பவாரை உதாரணமாகக் காட்டிய அவர், பாஜகவுடன் சமரசம் செய்து கொள்வதன் மூலம் துணை முதல்வர் பதவி கிடைக்கலாம், ஆனால் இறுதியில் அந்த மாநிலக் கட்சிகள் ஓரங்கட்டப்படும் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
வெற்றி பெற முடியாத மாநிலங்களில் சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சிக்கு வருவதையும், பின்னர் அதே கட்சிகளைப் புறக்கணிப்பதையும் பாஜக ஒரு உத்தியாகக் கொண்டுள்ளது என்றும் அவர் விமர்சித்தார். குறிப்பாகத் தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தை (TVK) தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் (NDA) கொண்டுவர பாஜக தீவிர முயற்சி எடுத்து வருவதாகக் கூறப்படும் நிலையில், கபில் சிபலின் இந்த எச்சரிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
