நடிகர் ஜீவா நடிப்பில் அண்மையில் வெளியான “தலைவர் தம்பி தலைமையில்” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு நகைச்சுவை வசனம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு கரூரில் நடைபெற்ற அரசியல் கட்சி மாநாட்டின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சோகமான சம்பவத்தின்போது, அமைச்சர் அன்பில் மகேஷ் கூறிய உருக்கமான வார்த்தைகளை இப்படத்தில் கிண்டலுக்காகப் பயன்படுத்தியுள்ளனர். இந்த விவகாரம் பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ள நிலையில், இது குறித்து விளக்கமளித்த நடிகர் ஜீவா, அந்த வசனத்தை இயக்குநரின் வேண்டுகோளுக்கேற்பவும், சமூக வலைதள டிரெண்டைப் பின்பற்றியும் பேசியதாகத் தெரிவித்தார்.
யாரையும் புண்படுத்தும் நோக்கம் தமக்கு இல்லை என்றும், அந்த வசனத்தை மிகவும் வெகுளியாகவே பேசியதாகவும் அவர் கூறினார். இருப்பினும், இத்தனை உயிர்கள் பலியான ஒரு துயரச் சம்பவத்தைக் நகைச்சுவையாக்கியதற்கு வருத்தமோ அல்லது மன்னிப்போ கோராமல், சிரித்தபடியே அவர் விளக்கம் அளித்தது நெட்டிசன்களிடையே மேலும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று 11 கோடி ரூபாய்க்கு மேல் ஈட்டியிருந்தாலும், பொறுப்பற்ற முறையில் வசனம் பேசியதற்காக ஜீவா மற்றும் படக்குழுவினர் மீது சமூக வலைதளங்களில் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.
