நான் எடுக்க நெனச்சதே வேற… ஆனா அந்த பாட்டெல்லாம் வச்சு கெடுத்துட்டோம்… கமல் ஆதங்கம்!

By vinoth

Published on:

தமிழ் திரையுலகில் அர்ப்பணிப்பு உணர்வுக்கு பெயர்பெற்ற நடிகர் கமல்ஹாசன். சினிமாவில் எந்த துறையாக இருப்பினும் தன்னுடைய திறமையை அதில் வெளிகாட்டி விடுவார் நடிகர் கமல். அதே போல எந்தவொரு புதிய தொழில்நுட்பம் வந்தாலும் அதை முதலில் பயன்படுத்தி பரிசோதிக்கும் நபராக கமல்தான் இருப்பார்.

இதனால்தான் தமிழ் சினிமாவில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் இயங்கி வருகிறார். நடிப்பு, இயக்கம், பாடல் பாடுதல், பாடல் எழுதுதல், தயாரிப்பு என ஒரு பல்துறை வித்தகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். மூன்றாம் பிறை, நாயகன் மற்றும் இந்தியன் ஆகிய மூன்று திரைப்படங்களுக்காக தேசிய விருது பெற்றுள்ளார்.

   

இந்நிலையில் 100 படங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் அதிகமாக படங்களில் நடிப்பதைக் குறைத்துக்கொண்டு நிறைய பரிசோதனை முயற்சி படங்களில் நடிக்க தொடங்கினார். அப்படி 1989 ஆம் ஆண்டு அவர் இரட்டை வேடத்தில் நடித்து வெளியான திரைப்படம்தான் அபூர்வ சகோதரர்கள்.

வழக்கமான தந்தையைக் கொன்ற வில்லன்களை மகன்கள் பழிவாங்கும் கதைதான் என்றாலும் அதில் ஒரு கதாபாத்திரத்தை குள்ளமான மனிதனாகக் காட்டி வித்தியாசம் காட்டியிருப்பார். அந்த படத்துக்காக அப்போதே பெரிய தொழில்நுட்ப வசதிகள் இல்லாத காலத்திலேயே கஷ்டப்பட்டு நடித்திருப்பார். இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

இந்த படம் பல ஆண்டுகள் கழித்து பேசிய கமல்ஹாசன் “முதலில அபூர்வ சகோதரர்கள் படத்தை குழந்தைகளுக்கான படமாகதான் எடுக்க நினைத்தோம். ஆனால் அதில் அதன் பிறகு காதல் காட்சிகள் இடம்பெற்றன. பின்னர் வாழவைக்கும் காதலுக்கு ஜே என்ற பாடல் இடம்பெற்றது. இதெல்லாம் குழந்தைகளுக்கு தேவையில்லாதது. அதனால் அந்த படத்தின் தொனியே மாறிவிட்டது” என ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.