CINEMA
பட்டினத்தார் பாடலைக் காப்பியடித்தாரா கண்ணதாசன்… கமல்ஹாசன் சொன்ன சுவாரஸ்ய தகவல்!
50 களில் முதலில் படங்களுக்கு கதை வசனம் மட்டும் எழுதிக் கொடுத்துக் கொண்டிருந்த கண்ணதாசன் 50 களின் இறுதியில் படங்களுக்கு பாடல்கள் எழுத ஆரம்பித்தார். அவரின் பாடல்கள் அடுத்தடுத்து ஹிட்டானதால் அவர் பாடல் எழுதுவதில் அதிக ஆர்வம் செலுத்த தொடங்கினார்.
தமிழ் சினிமாவின் பாடல் ஆசிரியர்களில் கண்ணதாசன் அளவுக்கு புகழ்பெற்றவர்கள் யாரும் இல்லை. அவர் இறந்து 40 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்றளவும் அவர் பாடல்கள் கொண்டாடப்பட்டு, அவர் நினைவு கூறப்படுகிறார்.
கண்ணதாசனின் பாடல்கள் உச்சத்தைத் தொட்டாலும் அவரை உட்கார வைத்துப் பாடல்கள் எழுதி வாங்குவதும் கடினமான ஒன்று. அவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் சொன்ன நேரத்தில் அவர் பாடல்கள் எழுத வரமாட்டார் என்ற குற்றச்சாட்டு உண்டு. ஆனால் வந்துவிட்டால் பாடல்கள் எழுதிக் கொடுத்துவிட்டுதான் போவார்.
அப்படி அவர் பாதகாணிக்கை என்ற படத்துக்காக எழுதிய பாடல்தான் “வீடுவரை உறவு… வீதிவரை மனைவி… காடுவரை பிள்ளை…. கடைசிவரை யாரோ” என்ற தத்துவப் பாடல். இந்த பாடல் தமிழர்கள் மனதில் நீங்காத இடம்பிடித்த பாடல். இன்றளவும் தமிழ்நாட்டில் இறுதி ஊர்வலங்களில் பாடப்படும் பாடலாக உள்ளது.
ஆனால் இந்த பாடலை கண்ணதாசன் பட்டினத்தாரின் பாடல் ஒன்றிலிருந்துதான் தழுவி எழுதியுள்ளார். இதுகுறித்து கமல்ஹாசன் ஒரு நேர்காணலில் சொல்லும் போது அந்த பாடல் வெளிவந்த போது நான் கண்ணதாசன் பட்டினத்தாரைக் காப்பியடித்துவிட்டார் என்று சொல்லிக் கொண்டிருந்தேன். ஆனால் ஒரு கட்டத்துக்குப் பிறகுதான் எனக்குப் புரிந்தது. இப்படி ஒன்றில் இருந்துதான் இன்னொன்று வரும் என்று.
கண்ணதாசன் உந்துதல் பெற்ற பட்டினத்தார் பாடல் வரிகள் இவைதான்.
மனையாளு மக்களும் வாழ்வுந் தனமுந்தன் வாயின்மட்டே
யினமான சுற்ற மயானம் மட்டே வழிக்கேது துணை
தினையாமள வௌளளவாகினு முன்பு செய்ததவந்
தனையாள வென்றும் பரலோகஞ் சித்திக்குஞ் சத்தியமே