அவர் பெரிய லெஜண்ட்… கமல் அந்த படத்துல எந்த தலையீடும் பண்ணல- நாசர் சொன்ன தகவல்!

By vinoth on ஏப்ரல் 1, 2024

Spread the love

1992 ஆம் ஆண்டு கமல்ஹாசன் திரைக்கதை வசனத்தில் தேவர்மகன் திரைப்படம் வெளியானது. இந்த படமும் காட்பாதர் திரைப்படத்தை தழுவி உருவாக்கப்பட்டதுதான். மணிரத்னம் காட்பாதர் திரைப்படத்தை ஒரு கோணத்தில் தழுவி நாயகன் உருவாக்கி இருந்தார் என்றால், கமல்ஹாசன் அதை வேறொரு கோணத்தில் தழுவி உருவாக்கி இருந்தார். இந்த படத்தை மலையாள சினிமவின் முன்னணி இயக்குனர் பரதன் இயக்கினார்.

இந்த படத்தின் திரைக்கதையை கமல்ஹாசன் மூவி மேஜிக் எனும் திரைக்கதை சாப்ட்வேரில் எழுதினார். அப்போதுதான் அந்த தொழில்நுட்பம் அறிமுகமாகியிருந்தது. அதைப் பற்றி அறிந்த கமல், உடனடியாக அதைப் பயன்படுத்தினார். இதனால் 10 நாட்களுக்குள் அந்த திரைக்கதையை அவர் முடித்தார் என்று சொல்லப்படுகிறது.

   

பொதுவாக கமல் தன்னுடைய படங்கள் பலவற்றை இயக்குனராக யாரையாவது போட்டுவிட்டு தானே இயக்கிக் கொள்வார் என்று சினிமா வட்டாரத்தில் சொல்லப்படுவது உண்டு. அன்பே சிவம், தசாவதாரம் உள்ளிட்ட படங்களை அவர்தான் இயக்கினார் என்றும் சொல்லப்படுவதுண்டு. அதே போல தேவர் மகன் படத்தையும் கமல்தான் இயக்கினார் என பலகாலமாக சொல்லப்பட்டு வருகிறது.

   

இந்நிலையில் அந்த படத்தில் வில்லன் வேடத்தில் நடித்திருந்த நாசர் இதுபற்றி ஒரு தகவலைப் பகிர்ந்துள்ளார். அதில் “தேவர் மகன் படத்தை முழுக்க முழுக்க ஒவ்வொரு ஷாட்டையும்  இயக்கியது பரதன் சார்தான். அவர் அப்போதே மிகப்பெரிய இயக்குனர். அதனால் அவரிடம் நாம் எதுவும் சொல்ல முடியாது. ஒரு காட்சியைப் படமாக்கும் போது ஒளிப்பதிவாளர் பி சிஸ்ரீராம் கேமராவை மூவ்மெண்ட் கொடுத்து படமாக்கலாம் என சொன்னார்.

 

ஆனால் பரதன் சார் ‘அது வேண்டாம், கேமரா நிலையாக இருக்கட்டும். அப்படியே படமாக்கிவிடலாம்’ என சொல்லிவிட்டார். நான் கூட கேமரா மூவ்மெண்ட் இருந்தால் நன்றாக இருக்குமே என அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் ‘எதற்காக? நல்ல காட்சி, நல்ல வசனங்கள். நல்ல நடிகர்கள் நடிக்கப் போகிறார்கள். அதை நான் அப்படியே படமாக்கினால் போதும். தேவையில்லாமல் ரசிகர்களை தொந்தரவு செய்யக் கூடாது’ எனக் கூறினார். அந்த அளவுக்கு அவர் ஞானமுள்ள இயக்குனர் அவர்” எனக் கூறியுள்ளார்.