தாமதமான நீதி அநீதிக்குச் சமம்… 7 வயதில் கைகளை இழந்த சிறுவன்… “நீதி கிடைத்தது… ஆனால் அதைப் பெற பப்பு உயிருடன் இல்லை”… 29 ஆண்டுகளுக்குப் பின் வந்த தீர்ப்பால் கலங்கும் குடும்பம்…!!!

By Muthu Mani on சித்திரை 17, 2026

Spread the love

 உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தின் 29 ஆண்டுகால சட்டப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. 1997-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், 7 வயது சிறுவனான பப்பு தனது வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தபோது, சாலையோரம் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த மின்மாற்றியால் (Transformer) மின்சாரம் தாக்கப்பட்டு கடுமையாகப் பாதிக்கப்பட்டான். இந்த விபத்தில் அவனது இரண்டு கைகளும் துண்டிக்கப்பட்டன. ஏழ்மையான அந்த குடும்பம் கடன் வாங்கி சிகிச்சை அளித்த போதிலும், பப்புவின் வாழ்க்கை முடங்கிப்போனது.

மின்சாரத் துறையின் அலட்சியத்தால் ஏற்பட்ட இந்த பாதிப்பிற்கு இழப்பீடு கோரி, பப்புவின் தந்தை ஹரி சிங் நீதிமன்றத்தை நாடினார். ஆனால், 2005-ம் ஆண்டு விசாரணை நீதிமன்றம், சிறுவனின் கவனக்குறைவால் விபத்து நடந்ததாகக் கூறி அந்த மனுவைத் தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்ந்து, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. பல தசாப்தங்களாக நீடித்த இந்த சட்டப் போராட்டத்தில், இப்போதுதான் அலகாபாத் உயர் நீதிமன்றம் மின்சார வாரியம் 26.65 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று இறுதித் தீர்ப்பு வழங்கியுள்ளது.

   

இந்த நீண்ட காத்திருப்பில் விபத்துக்குள்ளான பப்புவின் தந்தை ஹரி சிங், தாய் சாந்தி தேவி ஆகியோர் மகனின் துயரத்திலேயே காலமானார்கள். எஞ்சியிருந்த தனது நான்கு சகோதரர்களுடன் போராடிய பப்புவும், கடந்த 2024 மே மாதம் தனது 34-வது வயதில் காலமானார். இழப்பீடு குறித்த தீர்ப்பு வந்தபோது, அதைப் பெற பப்புவோ அல்லது அந்த விபத்தினால் வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட்ட அவனது பெற்றோரோ இன்று உயிருடன் இல்லை என்பதுதான் மிகப்பெரிய சோகமாகும்.

   

தற்போது பப்புவின் சகோதரர் பிரமோத் மற்றும் அண்ணி மிதிலேஷ் மட்டுமே உள்ளனர். உயர் நீதிமன்றம் தனது உத்தரவில், இந்த இழப்பீட்டுத் தொகையை வங்கி அல்லது தபால் அலுவலகத்தில் வைப்புத்தொகையாகச் செலுத்த வேண்டும் என்றும், இதற்கு மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம் உதவ வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. “வாழ்நாள் முழுவதும் இரு கைகளும் இன்றி நரக வேதனையை அனுபவித்த பப்புவுக்குக் கிடைத்த இந்த நீதி, அவன் மறைந்த பிறகு வந்திருப்பது வேதனையளிக்கிறது” என அவனது குடும்பத்தினர் கலங்குகின்றனர். விரைவில் வழக்கறிஞர் உதவியுடன் இழப்பீட்டுத் தொகையைப் பெற அவர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.