உருளைக்கிழங்கை வேகவைத்த பிறகு அதன் தோலை உரிப்பது பலருக்கும் சவாலான காரியமாக இருக்கும். குறிப்பாக உருளைக்கிழங்கு அதிகமாக வெந்துவிட்டாலோ அல்லது சரியாக வேகவில்லை என்றாலோ தோலை நீக்குவது கடினமாகிவிடும். இதற்கு தீர்வாக தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு எளிய வழிமுறை என்னவென்றால், உருளைக்கிழங்கை வேகவைப்பதற்கு முன்பே அதன் மையப்பகுதியில் கத்தியால் ஒரு மெல்லிய வட்டமான கீறலை இட வேண்டும். இப்படிச் செய்வதால் உருளைக்கிழங்கு வெந்ததும் அதன் தோல் தானாகவே இரண்டு பகுதிகளாகப் பிரிந்து, கைகளால் எளிதாக இழுக்கும் வகையில் அமைந்துவிடும்.
இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்தத் தந்திரத்தைப் பற்றி விளக்கிய பயனர், பிரஷர் குக்கரில் ஒரு விசில் வரும் வரை அல்லது ஒரு பாத்திரத்தில் 15 முதல் 20 நிமிடங்கள் வரை வேகவைத்தால் போதுமானது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த முறையைப் பின்பற்றுவதன் மூலம் உருளைக்கிழங்கு உரிக்கும் நேரம் பெருமளவு குறையும் என சமையல் கலைஞர்களும் இதனை அங்கீகரிக்கின்றனர். இந்த வீடியோவைப் பார்த்த பல பயனர்கள் இது மிகவும் பயனுள்ள தகவல் என்றும், குறிப்பாக பானிபூரி போன்ற உருளைக்கிழங்கு அதிகம் தேவைப்படும் உணவுகளைத் தயாரிப்பவர்களுக்கு இது மிகச்சிறந்த உத்தி என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் உருளைக்கிழங்கை விரைவாக உரிக்க சில கூடுதல் குறிப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. உருளைக்கிழங்கு வெந்தவுடன் அவற்றை உடனடியாக சுடுநீரிலிருந்து எடுத்து குளிர்ந்த நீரில் போடுவதன் மூலம், வெப்பநிலையில் ஏற்படும் திடீர் மாற்றத்தால் தோல் மிக எளிதாக வெளியே வரும். இதுதவிர, விரைவாக வேகவைக்க விரும்புபவர்கள் உருளைக்கிழங்குகளை நறுக்கிவிட்டு குக்கரில் வேகவைக்கலாம். இத்தகைய எளிய சமையல் தந்திரங்கள் இல்லத்தரசிகளின் வேலையைச் சுலபமாக்குவதுடன் நேரத்தையும் மிச்சப்படுத்த உதவுகின்றன.
View this post on Instagram
