அதிமுகவில் மீண்டும் இணைவதற்கான கதவுகள் எடப்பாடி பழனிசாமியால் முற்றிலுமாக அடைக்கப்பட்டுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் எதிர்காலம் குறித்த விவாதங்கள் தமிழக அரசியலில் பேசுபொருளாகியுள்ளன. எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதமான முடிவால் தனித்து விடப்பட்டுள்ள ஓபிஎஸ், திமுகவில் இணையக்கூடும் என்ற யூகங்கள் ஒருபுறம் உலாவருகின்றன. அதேவேளையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைவதே அவருக்குச் சரியான முடிவாக இருக்கும் என அக்கட்சியின் நிர்வாகிகள் சிலர் கருத்து தெரிவித்து வருவது புதுவிதமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் செய்தியாளர்கள் இதுகுறித்துக் கேள்வி எழுப்பியபோது, “நீங்கள் தவெக கட்சியா?” என்று ஓபிஎஸ் மழுப்பலாகப் பதிலளித்தது, அவர் தவெக பக்கம் சாய வாய்ப்புள்ளதா என்ற விவாதத்தைத் தூண்டியுள்ளது. தற்போது பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஓபிஎஸ், வரும் தேர்தல்களில் தனது அரசியல் இருப்பைத் தக்கவைக்க யாருடன் கைகோர்ப்பார் என்பது பெரும் புதிராகவே உள்ளது. ஒருவேளை அதிமுகவின் வாக்கு வங்கியைப் பிரிக்க அவர் விஜய்யுடன் கூட்டணி அமைப்பாரா அல்லது ஆளுங்கட்சியின் ஆதரவை நாடுவாரா என்பது, அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளிலேயே தெரியவரும்.
