தமிழக அரசியலில் நடிகர் விஜய்யின் தவெக எந்தக் கூட்டணியில் இணையும் என்ற கேள்வி நீண்ட நாட்களாகவே நீடித்து வருகிறது. திமுகவை எதிர்க்கும் நோக்கில் அவர் அதிமுக அல்லது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணைவார் எனப் பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், விஜய் இதுவரை எந்த முடிவையும் எடுக்காமல் அமைதி காத்து வருவது அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், விஜய்யின் அரசியல் வியூக வகுப்பாளரான ஜான் ஆரோக்கியசாமி, அவர் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவதற்குத் தடையாக இருப்பதாகக் கூறப்படுகிறது. கூட்டணி அமைப்பதாக இருந்தால், 90 தொகுதிகளைத் தவெக-வுக்கு ஒதுக்க வேண்டும் என்றும், விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்றும் அவர் கடுமையான நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாஜகவுடன் கூட்டணி அமைப்பது சிறுபான்மையினரின் வாக்குகளைப் பாதிக்கும் என்பதோடு, இளைஞர்கள் மற்றும் பெண்களின் கடும் எதிர்ப்பைச் சம்பாதிக்க நேரிடும் என்பதும் ஜான் ஆரோக்கியசாமியின் அச்சமாக உள்ளது. அதிமுகவை விடத் தாங்கள் அதிக வாக்குகளைப் பெறுவோம் என்று நம்பும் அவர், விஜயை இப்போதைய சூழலில் மற்ற கட்சிகளுடன் இணையும் முடிவில் இருந்து தடுத்து வருகிறார் என்று கூறப்படுகிறது.
விஜய்யின் தவெக-வில் உள்ள முக்கிய நிர்வாகிகளோ, சமீபத்திய அரசியல் சூழலில் அதிமுக கூட்டணியில் இணைவதே வெற்றிக்கு வழிவகுக்கும் என்று கருதுகின்றனர். தேர்தல் நெருங்கி வரும் சூழலில், ஜான் ஆரோக்கியசாமியின் வியூகத்திற்கும், கட்சியின் மற்ற முக்கிய நிர்வாகிகளின் எதிர்பார்ப்பிற்கும் இடையே நிலவும் இந்த முரண்பாடு, தவெக-வின் அடுத்தகட்ட நகர்வை மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளாக்கியுள்ளது.
