நடிகர் விஜய், இயக்குநர் ஹெச். வினோத் கூட்டணியில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம், 2026 பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியாக உள்ளது. இது தெலுங்கில் வெற்றி பெற்ற ‘பகவந்த் கேசரி’ படத்தின் ரீமேக் என்பதால், அரசியல் காட்சிகள் அதிகம் இல்லாமல் அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ளது.
விஜய் அரசியலில் ஈடுபட்டதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், தற்போது இதன் வெளியீட்டு உரிமையில் குழப்பம் நீடிக்கிறது. ரோமியோ பிக்சர்ஸ் ராகுல், தமிழ்நாடு மற்றும் கேரளா உரிமையை ₹115 கோடிக்கு பேசி அட்வான்ஸ் கொடுத்திருந்தாலும், மீதிப் பணம் வராததால் தயாரிப்பு நிறுவனம் வேறு விநியோகஸ்தர்களிடம் கொடுக்க ஆலோசித்து வருகிறது.
இதற்குக் காரணம், படத்திற்காக விஜய்க்கு பேசப்பட்ட ₹235 கோடி சம்பளத்தில், இன்னும் ₹85 கோடி பாக்கி இருக்கிறது. தமிழக வெளியீட்டு உரிமையை விற்ற பணத்தைக் கொண்டு பாக்கியைச் செலுத்தத் தயாரிப்பாளர் திட்டமிட்டிருந்த நிலையில், பணம் வராததால் விஜய் இன்னமும் டப்பிங் பேசாமல் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. வெளிநாட்டுப் பணம் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரோமியோ ராகுல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற விநியோகஸ்தர்களும் இந்த உரிமையைப் பெறப் போட்டியிடுகின்றனர்.
