பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் கல்வித் துறைக்கான நிதி குறைப்பு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, போதிய உள்கட்டமைப்பு வசதியின்மை போன்ற பிரச்சினைகளை முன்வைத்து மாணவர்கள் தீவிரப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். பாரிஸ், ரோம், மிலன் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பள்ளிகளை முற்றுகையிட்டு நடத்தப்படும் இப்போராட்டங்கள் சில இடங்களில் வன்முறையாக மாறி, கடைகள் சூறையாடப்படுவது மற்றும் பொதுச் சொத்துகளுக்குத் தீ வைப்பது போன்ற சட்டவிரோதச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
நிலைமையைக் கட்டுப்படுத்தவும் சேதங்களைத் தவிர்க்கவும் இரு நாட்டு அரசுகளும் கடுமையான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. பிரான்சில் உள்ள சிவில் சட்டத்தின்படி, சிறார்கள் செய்யும் சேதங்களுக்கு அவர்களுடன் வசிக்கும் பெற்றோரே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்பதால், சேதங்களுக்கான இழப்பீட்டுத் தொகையை அவர்களின் பெற்றோரிடமிருந்தே வசூலிக்க அரசு வழக்கறிஞர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேபோல் இத்தாலியில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய பாதுகாப்புத் திட்டத்தின்படி, போராட்டங்களில் பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்தும் மைனர்களின் பெற்றோரிடம் நேரடியாக நஷ்டஈடு வசூலிக்கவும், தேவைப்பட்டால் அவர்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்யவும் அல்லது அரசு நலத்திட்ட நிதியிலிருந்து பிடித்தம் செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் வன்முறையில் ஈடுபடுவோருக்கு அபராதமும் சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் சூழலில், இக்கடுமையான நடவடிக்கைகள் மாணவர் போராட்டங்களைத் தடுத்து அமைதியை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
