தமிழ் சினிமாவின் வியாபார எல்லையைப் பெருக்கியவர்களில் ஒருவர் இயக்குனர் ஷங்கர். அவர் படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த நிலையில் தமிழ் சினிமாவின் நம்பர் 1 கமர்ஷியல் இயக்குனராக அறியப்பட்டார். ஆனால் சமீபகாலமாக அவர் இயக்கிய ஐ, 2.0 மற்றும் இந்தியன் 2 ஆகிய படங்கள் அவரது முந்தையப் படங்களின் வெற்றியைப் பெறவில்லை.
அதிலும் இந்தியன் 2 திரைப்படம் கடுமையான கேலிகளுக்கு ஆளாகியுள்ளது. சமூகவலைதளங்களில் அந்த படத்தை அக்குவேறு, ஆணிவேராகக் கிழித்து தொங்கவிட்டுக் கொண்டிருக்கின்றனர். இத்தனைக்கும் ஷங்கர் தன்னுடைய படங்களில் ஊழல் எனும் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருப்பதே காரணம் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இயக்குனர் ஷங்கரின் வெற்றிக்கு சுஜாதா ஒரு முக்கியக் காரணியாக இருந்தார். அவர் படத்துக்கு சுஜாதா இந்தியன், முதல்வன், பாய்ஸ், அந்நியன் மற்றும் சிவாஜி என தொடர்ந்து பணியாற்றினார். டைட்டிலில் சுஜாதா வசனம் என்று மட்டும் வந்தாலும், அவர் எல்லா படங்களிலும் திரைக்கதையிலும் பணியாற்றியுள்ளார் என்பது அவரை அறிந்தவர்களுக்கு தெரியும். இந்த படங்களில் வசனங்கள் கனக்கச்சிதமாக இருக்கும். இருவரும் இணைந்து கடைசியாக பணியாற்றிய படம் என்றால் அது ரஜினி நடித்த எந்திரன் படம்தான். அதன் பின்னர் ஷங்கர் தடுமாறி வருகிறார் என்பது கண்கூடு.
இந்நிலையில் இந்தியன் 2 படத்துக்கு முன்பு இயக்குனர் ஷங்கர் கொடுத்த ஒரு நேர்காணலில் கோபிநாத்துடன் உரையாடினார். அந்த நேர்காணலில் “உங்கள் படங்கள் தோல்வி அடைந்தால் அதை எப்படி எடுத்துக் கொள்வீர்கள்?’ என்று கோபிநாத் கேட்டார். அதற்கு ஷங்கர் “என் படங்கள் எதுவும் தோல்வி அடைந்ததில்லை” என்று பதில் சொல்லியிருந்தார். சில நாட்களில் ரிலீஸான இந்தியன் 2 படம் வரலாறு காணாத தோல்வியடைந்தது. அந்த வீடியோவை தற்போது ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
