பிரபல நடிகரான விஜய் சேதுபதி தென்மேற்கு பருவக்காற்று படம் மூலம் ஹீரோவாக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். விஜய் சேதுபதி தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார். சிறிய சிறிய வேடங்களில் நடித்து பல அவமானங்களை சந்தித்து இன்று வெற்றி நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். நடித்தால் ஹீரோவாக மட்டும் தான் நடிப்பேன் என்ற கொள்கை இல்லாமல் கதைக்கு தேவை என்றால் எந்த ஒரு கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றார். ஒரு பக்கம் ஹீரோவாகவும் மறுபக்கம் வில்லனாகவும் மிரட்டிக் கொண்டிருக்கிறார்.

விஜய் சேதுபதி ஹீரோவாக தொடர்ந்து நடிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகிறார்கள். தனது ஐம்பதாவது படமாக மகாராஜா படத்தில் நடித்த விஜய் சேதுபதி ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார். இவர் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் நானும் ரவுடி தான். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார்.

போடா போடி படத்திற்கு பிறகு சில ஆண்டு இடைவெளி விட்டு விக்னேஷ் சிவன் உருவாக்கிய திரைப்படம் தான் நானும் ரவுடிதான். முதலில் படத்தில் நடிக்க பல நடிகர்களை அணுகிய விக்னேஷ் சிவன் கடைசியாக விஜய் சேதுபதிக்கு இந்த கதையை கூறி அவரை நடிக்க வைத்தார். மேலும் இப் படத்தை தனுஷ் தயாரித்திருந்தார். இதில் நயன்தாரா காத்து கேளாத காதம்பரியாக நடித்திருப்பார். இந்த படம் பலருக்கு பிடித்த ஒரு படமாக இருக்கிறது என்றே சொல்லலாம்.

அந்தவகையில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் இந்த படத்தை பார்த்துவிட்டு அவருக்கு மிகவும் பிடித்து விட்டதாம். இதில் விஜய் சேதுபதியின் நடிப்பு அவ்வளவு அருமையாக இருந்ததாகவும் 100 முறை இந்த படத்தை பார்த்ததாகவும் கூறியுள்ளார். மேலும் இந்த படத்தை பார்த்த பிறகு விஜய் சேதுபதிக்கு போன் செய்து இந்த படம் குறித்து பாராட்டிவிட்டு பின்னர் உங்களுடன் நடிக்க வேண்டும் என்று கூறியதாகவும் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
