மத்திய கிழக்கில் அமெரிக்கத் தளங்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் மீது ஈரான் நடத்தி வரும் ஏவுகணைத் தாக்குதல்களின் துல்லியம் கணிசமாக அதிகரித்துள்ளது. ‘தாட்’ வான் பாதுகாப்பு அமைப்பையும் மீறி ஜோர்தானில் உள்ள அமெரிக்கத் தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3 வீரர்கள் பலியாயினர். இந்தத் தாக்குதல்களின் பின்னணியில் ஈரானுக்கு சீனாவின் செயற்கைக்கோள் படங்களும், ரஷ்யா உக்ரைன் போரில் கற்றுக்கொண்ட ராணுவத் தந்திரங்களும் உதவியாக இருந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இருப்பினும், ஈரானுக்கு ஆயுதங்கள் வழங்கப்படாது என சீன மற்றும் ரஷ்ய அதிபர்கள் உறுதியளித்துள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரானின் ராணுவத் திறன்கள் அழிக்கப்பட்டுவிட்டதாக அமெரிக்கத் தரப்பில் கூறப்பட்ட போதிலும், அதனிடமிருந்த ஏவுகணைகளில் சுமார் 70 சதவீதம் இன்னும் பாதுகாப்பாகவே உள்ளதாக அமெரிக்க உளவுத்துறை மதிப்பிட்டுள்ளது. கடந்த மூன்றாண்டு காலத்தில் மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்ப மேம்பாடுகள், மேம்பட்ட வழிகாட்டு அமைப்புகள் மற்றும் ஒருங்கிணைந்த திட்டமிடல் ஆகியவை ஈரானின் ஏவுகணைத் திட்டத்தை வலுப்படுத்தியுள்ளன. மேலும், சீன மின்னணுவியல் பாகங்கள் மற்றும் ராக்கெட் எரிபொருட்களைப் பயன்படுத்தி ஈரான் தயாரித்துள்ள ஆயுதங்கள், மேலை நாடுகளின் சக்திவாய்ந்த வான் பாதுகாப்பு அமைப்புகளை மீறித் தாக்கும் திறன் கொண்டவையாக விளங்குகின்றன.
ரஷ்யா உக்ரைனில் பயன்படுத்திய நுட்பங்களைப் பின்பற்றி, ட்ரோன்கள் மூலம் எதிரிகளின் வான் பாதுகாப்பு அமைப்புகளின் கவனத்தைத் திசைதிருப்பி, பின் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவும் புதிய தந்திரங்களை ஈரான் கையாள்கிறது. அமெரிக்கா ஏற்கனவே ஆயுதப் பற்றாக்குறையால் தடுமாறி வரும் வேளையில், ஈரானின் இந்தத் தந்திரோபாய முன்னேற்றம் பெரிய சவாலாக மாறியுள்ளது. சீனா, ரஷ்யா, வடகொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் முறையான ராணுவக் கூட்டணியாக மாறாவிட்டாலும், மேலை நாடுகளுக்கு எதிரான தங்களது பிணைப்பையும் உறவையும் பெருமளவில் பலப்படுத்தியுள்ளன.
