தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் மதுபானக் கடைகளில் விற்பனையை அதிகரிக்கும் வகையில், புதிதாக 20 வகையான மதுபானங்களை அறிமுகம் செய்ய தமிழக டாஸ்மாக் நிர்வாகம் தீர்மானித்துள்ளது. இதன் முதற்கட்டமாக இளைஞர்களை வெகுவாகக் கவரும் வகையில் பிர்ரா (Bira), ஹெய்னகென் சில்வர் (Heineken Silver), சிம்பா ரோர் (Simba Roar) மற்றும் லோன் உல்ப் (Lone Wolf) ஆகிய 4 புதிய பிரீமியம் பீர் ரகங்கள் டாஸ்மாக் ‘எலைட்’ (Elite) கடைகளில் விற்பனைக்கு வரவுள்ளன. வெளிமாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இந்த புதிய பீர் வகைகள் குறைந்தபட்சம் ரூ. 250 ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்பட உள்ளன.
தற்போது தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மற்றும் எலைட் கடைகளில் பல்வேறு பிராண்டுகளின் பிராந்தி, விஸ்கி, ரம், வோட்கா மற்றும் பீர் வகைகள் என ஒட்டுமொத்தமாக 800-க்கும் மேற்பட்ட மதுபான தயாரிப்புகள் புழக்கத்தில் உள்ளன. பீர் வகைகளைப் பொறுத்தவரை கிங்பிஷர், பட்வைசர், கார்ல்ஸ்பெர்க், டியூபார்க் உள்ளிட்ட 21 முன்னணி ரகங்கள் ஏற்கனவே விற்பனையில் இருந்து வரும் நிலையில், இந்த புதிய 4 பீர் வகைகளின் வருகையால் டாஸ்மாக்கில் கிடைக்கக்கூடிய மொத்த பீர் ரகங்களின் எண்ணிக்கை 25-ஆக உயரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
