ஊழலற்ற தமிழகம்… நீட் விலக்கு & மேகதாது விவகாரம்… குறுகிய காலத்தில் நல்லாட்சி… ரூ.2500 கோடி ஊழல் டெண்டர் ரத்து… தவெக அமைச்சர் அதிரடி பேட்டி…!

By Visaka on ஆடி 31, 2026

Spread the love

தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்றது முதல் ஊழலை ஒழிப்பதிலும், வெளிப்படையான நிர்வாகத்தை வழங்குவதிலும் தீவிர கவனம் செலுத்தி வருவதாக அமைச்சர் நிர்மல்குமார் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். முந்தைய ஆட்சிக்காலத்தில் அரசுத் திட்ட ஒப்புதல்களுக்கு ‘கட்சி நிதி’ என்ற பெயரில் லஞ்சம் பெறப்பட்டதாகவும், இதனால் அரசுக்கு மிகப்பெரிய நிதி இழப்பு ஏற்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். தற்போது தவெக அரசு 95 சதவீத ஊழலை ஒழித்துவிட்டதாகத் தெரிவித்த அவர், எரிசக்தித் துறையில் விதிகளை மீறி ரூ.2,500 கோடி மதிப்பில் அனுமதிக்கப்பட்ட 45 டெண்டர்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளில் தவெக அரசு எப்போதுமே ஈடுபடாது என்றும், தவறு செய்பவர்கள் மீதான சட்டப்படியான நடவடிக்கைகளுக்கு காவல்துறைக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், நீட் தேர்வில் விலக்கு கோரும் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும், மேகதாது விவகாரம் மற்றும் மாநிலத்தின் உரிமைகளைப் பாதுகாக்க நிபுணர்களுடன் கலந்தாலோசித்து அனைத்துச் சட்டப்பூர்வ வழிகளும் ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

   

இதனிடையே, தவெக தலைமையிலான கூட்டணி மிகவும் சுமூகமாகச் செயல்பட்டு வருவதாகவும், உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகவும், ஊழலற்ற நிர்வாகத்தின் மூலம் விரைவில் இந்த முதலீடுகள் உறுதுணையாக மாறும் என்றும் அமைச்சர் நிர்மல்குமார் தனது பேட்டியில் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.