கரும்புத் தோட்டத்தில் ஓட ஓட விரட்டி கொலை… கொல்லப்பட்ட ரௌடி மதன் யார்?… நீதிமன்றத்திற்குள் வழக்கறிஞர் போல நுழைந்த திகில் பின்னணி……!

By Nanthini on ஐப்பசி 21, 2026

Spread the love

சிவகங்கை மாவட்டத்தில் சரித்திரப் பதிவேட்டுக் குற்றவாளியான ‘சுள்ளான் மதன்’ கடந்த அக்டோபர் 18-ம் தேதி மர்மக் கும்பலால் கரும்புத் தோட்டத்தில் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். இவர் மீது இரட்டைக் கொலை வழக்கு உள்பட 15-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இக்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இக்கொலை தொடர்பாக சிவகங்கை நகரக் காவல்துறை துரிதமாகச் செயல்பட்டு 3 பேரைக் கைது செய்துள்ளதோடு, தலைமறைவாக உள்ள மற்றவர்களைப் பிடிக்க 6 தனிப்படைகளை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.

இக்கொலையை விடவும் காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது சமூக வலைதளங்களில் அரங்கேறிய பழிவாங்கும் மோதல்கள்தான். மதன் கொல்லப்பட்ட சில நிமிடங்களிலேயே எதிர் தரப்பினர் அவரது உடலின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டாடினர். இதற்குப் பதிலடியாக மதனின் ஆதரவாளர்களும் “கொலைகள் தொடரும், தலைகள் உருளும்” என ஆக்ரோஷமான வசனங்களுடன் ரீல்ஸ்களை பதிவேற்றி பகிரங்கமாக மிரட்டல் விடுத்தனர். இதனால் சிவகங்கை வட்டாரத்தில் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

   

இத்தகைய வன்முறை மற்றும் இன்ஸ்டாகிராம் கலாசாரம் நேற்று இன்று உருவானது அல்ல; கடந்த 2021-ம் ஆண்டு வழக்கறிஞர் அக்னிராஜ் படுகொலைக்குப் பிறகு, சமூக வலைதளங்கள் வாயிலாகத் திட்டமிடப்பட்டு அடுத்தடுத்த கொலைகள் அரங்கேறும் போக்கு சிவகங்கை பகுதியில் தொடர்கதையாகி வருகிறது. லைக்குகளுக்காகவும் தவறான ஹீரோயிசத்திற்காகவும் இளைஞர்கள் கையில் செல்போனை ஏந்தி நடத்தும் இந்த இணைய சண்டைகள், பழிவாங்கும் கலாசாரத்தை மேலும் வளர்த்து அவர்களின் ஒட்டுமொத்த எதிர்காலத்தையும் சீரழித்து வருகிறது.

   

சமூக வலைதளப் பதிவுகள் மூலம் மீண்டும் ஒரு சாதி அல்லது தரப்பு மோதல் வெடிப்பதைக் கடுமையாகத் தடுத்து நிறுத்த சிவகங்கை மாவட்டக் காவல்துறை அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. வன்முறையைத் தூண்டும் வகையிலும் கொலை மிரட்டல் விடுத்தும் செயல்பட்ட 36 இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூல் கணக்குகளைக் காவல்துறை அதிரடியாக முடக்கியுள்ளதுடன், இது தொடர்பாக இரண்டு வழக்குகளையும் பதிவு செய்துள்ளது. இந்தச் சம்பவம், தொழில்நுட்பத்தை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்த வேண்டிய இளைஞர்கள், வன்முறைக்குத் தங்களைப் பலிகடாக்கிக் கொள்ளும் அவல நிலையை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.