எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு பேரதிர்ச்சி…. டார்க் வெப்பில் கசிந்த லட்சக்கணக்கானோர் டேட்டா?…. உங்க அக்கவுண்ட் சேஃபா?… திடுக்கிடும் தகவல்….!

By Nanthini on ஐப்பசி 21, 2026

Spread the love

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) தொடர்பான வாடிக்கையாளர் தரவு கசிவு குறித்த செய்தி தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. டார்க் வெப்பில் சுமார் 3.75 லட்சம் பதிவுகள் கண்டறியப்பட்ட நிலையில், வங்கியின் முதற்கட்ட விசாரணையில் அவற்றில் 3,897 பதிவுகளில் மட்டுமே வாடிக்கையாளர்களை அடையாளம் காணக்கூடிய உண்மையான தனிப்பட்ட விவரங்கள் இருப்பது உறுதியாகியுள்ளது. அக்டோபர் 16ஆம் தேதி கிடைத்த இந்த எச்சரிக்கையை அடுத்து, வங்கி உடனடியாகத் தன் இணையப் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதுடன், சுயாதீன இணையப் பாதுகாப்பு நிறுவனத்தின் உதவியுடன் தீவிர விசாரணையையும் மேற்கொண்டு வருகிறது.

   

இந்தத் தரவுக் கசிவில் வாடிக்கையாளர்களின் பெயர், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண், பிறந்த தேதி, மின்னஞ்சல் முகவரி, வீட்டு முகவரி மற்றும் பாலினம் போன்ற முக்கியத் தனிப்பட்ட தகவல்கள் வெளிப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், வங்கிக் கிளை மற்றும் வாடிக்கையாளர் அடையாள எண்கள், கடன் விண்ணப்பங்கள் தொடர்பான விவரங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. இந்தத் தகவல்கள் தவறான நபர்களின் கைகளுக்குச் செல்லும்போது, அவர்கள் வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொண்டு வங்கி அதிகாரிகள் போல் பேசி ஏமாற்ற முயலும் வாய்ப்பIகள் உள்ளன.

   

எனினும், வாடிக்கையாளர்களின் பெயர் மற்றும் முகவரி போன்ற தகவல்கள் கசிந்துவிட்டன என்பதற்காக அவர்களது வங்கிக் கணக்குகளோ அல்லது கடவுச்சொற்களோ ஹேக் செய்யப்பட்டுவிட்டதாக அர்த்தம் கொள்ளத் தேவையில்லை. வங்கியின் முதற்கட்ட விளக்கத்தின்படி, இந்தச் சம்பவமானது எஸ்பிஐயின் முக்கிய வணிகச் செயல்பாடுகள், நிதிநிலை அல்லது வணிகத் தொடர்ச்சியில் எந்தவொரு குறிப்பிடத்தக்க பாதிப்பையும் ஏற்படுத்தாது. அதாவது, வாடிக்கையாளர்களின் கணக்கில் உள்ள பணம் தானாகவோ அல்லது உடனடியாகவோ திருடப்பட்டுவிடும் அபாயம் இல்லை என்பதை இது தெளிவாக உணர்த்துகிறது.

 

ஆனாலும், இத்தகைய தனிப்பட்ட விவரங்களைக் கொண்டு மர்ம நபர்கள் வாடிக்கையாளர்களை இலக்கு வைக்கக்கூடும் என்பதால் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகும். வங்கிக் கணக்கைப் பாதுகாக்க வேண்டும், கேஒய்சி (KYC) விவரங்களைப் புதுப்பிக்க வேண்டும் அல்லது கணக்கு முடக்கப்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறி OTP, ATM PIN, UPI PIN அல்லது இணைய வங்கிக் கடவுச்சொல்லைக் கேட்கும் போலியான அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளிடம் வாடிக்கையாளர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வங்கி அதிகாரிகள் என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்பவர்களிடம் கூட எக்காரணம் கொண்டும் ரகசியத் தகவல்களைப் பகிரக் கூடாது.

இந்தச் சூழலில், எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் பதற்றமடையாமல் சில அடிப்படைப் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுவது அவசியமாகும். யாரேனும் அழைத்து OTP அல்லது PIN எண்களைக் கேட்டால் பகிர வேண்டாம்; சந்தேகத்திற்குரிய இணையதள இணைப்புகளைத் திறப்பதைத் தவிர்க்கவும்; உங்கள் கணக்கில் நடைபெறும் பரிவர்த்தனைகளைத் தொடர்ந்து கண்காணித்து, சந்தேகமான மாற்றங்கள் ஏதேனும் இருப்பின் உடனடியாக வங்கிக்குத் தெரிவிக்கவும். எஸ்பிஐயின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது செயலி மூலமாக மட்டுமே தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்வதுடன், நிதி மோசடிகள் ஏதேனும் ஏற்பட்டால் உடனடியாக 1930 என்ற தேசிய இணையக் குற்ற உதவி எண்ணையோ அல்லது cybercrime.gov.in என்ற இணையதளத்தையோ தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.

தற்போதைய தரவுக் கசிவு சம்பவம் குறித்து எஸ்பிஐ தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதால், இதன் முழுமையான பின்னணி மற்றும் தாக்கம் குறித்த விவரங்கள் விசாரணையின் முடிவிலேயே முழுமையாகத் தெரியவரும். வாடிக்கையாளர்கள் எவ்வித பீதியுமின்றி தங்களின் வங்கிப் பரிவர்த்தனைகளில் கவனமுடன் செயல்படுவதுடன், எந்தவொரு சந்தேகத்திற்கிடமான அழைப்புகளுக்கும் இடமளிக்காமல் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இச்சம்பவத்திலிருந்து மட்டுமல்லாமல், எதிர்காலத்தில ஏற்படக்கூடிய அனைத்து வகையான இணையவழி வங்கி மோசடிகளிலிருந்தும் முழுமையான பாதுகாப்பை வழங்கும்.